மேட்டூர் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

மேட்டூர் அருகே பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன்கள் திடீரென செத்து மிதந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அருகே பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரியில் மீன்கள் திடீரென செத்து மிதந்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஏழரைமத்திகாடு பகுதியில் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான தும்பல்காட்டு பள்ளம் ஏரி உள்ளது. இந்த ஏரியை உள்நாட்டு மீனவர் சங்கத்தினர் குத்தகைக்கு எடுத்துள்ளனர். இதில் கட்லா, ரோகு, மிர்கால், கண்ணாடிகெண்டை, பில்லுகெண்டை உள்ளிட்ட 6 வகையான மீன்கள் வளர்க்கப்படுகின்றன. மூன்று லட்சம் மீன் குஞ்சுகளும் இந்த ஏரியில் விடப்பட்டுள்ளன. நன்கு வளர்ந்த மீன்களை வாரந்தோறும் சனிக்கிழமை இரவில் பிடித்து, ஞாயிற்றுக்கிழமை சந்தைப்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் சனிக்கிழமை மாலை மீனவர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மீன்வளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். மீன்வளத் துறை உதவி இயக்குநர் சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதையடுத்து ஏரி நீரையும் இறந்த மீன்களையும் ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து கொளத்தூர் ஒன்றிய உள்நாட்டு மீனவர் சங்கத் தலைவர் பெருமாள் கூறியது: மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதப்பதால் மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏரி நீரில் யாரேனும் விஷம் கலந்துள்ளனரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து மாதிரிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மீன்கள் மற்றும் தண்ணீர் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே தெரியும்வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com