Enable Javscript for better performance
காடையாம்பட்டி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காடையாம்பட்டி அருகே நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

    By DIN  |   Published on : 08th October 2016 03:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓமலூர் அருகே காடையாம்பட்டி சரபங்கா நதியில் உள்ள நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
    ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி வட்டாரம், டேனிஷ்பேட்டை கிராமத்தில் இருந்து சரபங்கா நதி உற்பத்தியாகி காடையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் மற்றும் எடப்பாடி வழியாகச் சென்று பூலாம்பட்டி காவிரியாற்றில் கலக்கிறது. கடந்த மாதம் பெய்த மழையின்போது நீர் நதியில் செல்லாமல் வயல்வெளிகளில் சென்று வீணாகி விட்டதாகவும், நதியின் பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து காடையாம்பட்டி வட்டாட்சியர் ராஜேஷ்குமார் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் நதியை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகள் மற்றும் நதியின் அடைப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள மேற்கு சரபங்கா நதியின் பல்வேறு இடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டன. ஆற்றின் குறுக்கே ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகள் தண்ணீர் செல்லும் வகையில் அகற்றப்பட்டன. இதனிடையே இந்த பணிகள் முழுமையாக நிறைவேற்றபடாமல் புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மண்ணை அள்ளிக் கொட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
    இதுகுறித்து சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: காடையாம்பட்டி சந்தைத்தடம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்கு நதியின் குறுக்காகச் செல்லும் பாதையை அகற்றியுள்ளனர். இதனால், கிராம மக்கள் தங்களது ஆடு, மாடுகளை ஆற்றைக் கடந்து அழைத்துச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆற்றில் இருந்த பாதையை அகற்றி விட்டதால் ஆற்றில் இறங்கியே சென்று வருகின்றனர். கிராம மக்கள் ஆற்றைக் கடந்து செல்லும் வகையில் ஆற்றின் குறுக்கே குழாய்கள் அமைத்து பாதையை சரி செய்யவும் அதிகாரிகள் தடை விதித்து விட்டதால் போக்குவரத்துக்கு வழியின்றி தவித்து வருகிறோம். ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும், அதிகாரம் படைத்தவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், ஏழை மக்கள் செல்லும் பாதையை மட்டுமே ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai