Enable Javscript for better performance
சின்னதிருப்பதி கோயிலில் அலங்கார நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    சேலம் சின்னதிருப்பதியில் உள்ள பெருமாள் கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சுவாமியின் அலங்கார நகைகளை திருடிச் சென்றனர்.
    சின்னதிருப்பதியில் வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வருபவர் ஜெயராமன் (63). இவர் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்று நுழைவுவாயில் கதவை திறந்தார். அப்போது, கோயிலில் உள்ள சன்னதிகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், உண்டியலின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.
    இதுதொடர்பாக அர்ச்சகர் ஜெயராமன், கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    இதில் மர்ம நபர்கள், கோயில் சன்னதி கருவறையின் கதவைத் திறக்க முயன்றது தெரியவந்தது. அந்தக் கதவைத் திறக்க முடியாததால் சன்னதிக்குப் பின்னால் இருந்த அறையில் வைக்கப்பட்டிருந்த பத்மாவதி தாயாரின் தாமரை புஷ்பம், தங்க முலாம் பூசப்பட்ட கிரீடம் உள்ளிட்ட அலங்கார நகைகளை திருடிச் சென்றனர்.
    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைவிரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. விசாரணையில் உண்டியலில் சென்சார் பொருத்தப்பட்டிருந்ததால், அதில் இருந்து பணத்தை எடுக்க முடியாதது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை இந்தக் கோயிலில் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
    தற்போது மூன்றாவது முறையாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai