Enable Javscript for better performance
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

    By ஆத்தூர்/தம்மம்பட்டி,  |   Published on : 15th October 2016 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி அருகே 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை ஆத்தூர் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
     சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (35). இவரது மனைவி தீபா (28). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
     இந்த நிலையில் வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன் மகன் ராஜீவ்காந்தி (21) என்பவர் தனது செல்லிடப்பேசி, தீபாவிடம் இருப்பதாகக் கூறி, அவரது வீட்டுக்குச் சென்று தகராறு செய்தாராம். அப்போது ராஜீவ்காந்தி, தீபாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தீபா, சின்னதுரை ஆகியோர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் ராஜீவ்காந்தி மீது புகார் அளித்தனர்.
     இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை ராஜீவ்காந்தி, அவரது தாய் இந்திராகாந்தி ஆகியோர் தீபாவின் வீட்டுக்கு சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தது குறித்து கேவலமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்த தீபா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
     இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி போலீஸார், தீபாவின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை முன் குவிந்த உறவினர்கள், தீபா அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் உயிரிழந்திருக்க மாட்டார் என்றும், அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆத்தூர் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் எஸ்.பாஸ்கரபாபு, மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தார்.
     ஒருவர் கைது: இந்தச் சம்பவம் குறித்து கெங்கவல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீபாவை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜீவ்காந்தியை வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர். மேலும் மாதேஸ்வரன், இந்திராகாந்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai