Enable Javscript for better performance
பெரியார் பல்கலைக்கழகத்தில் 16-ஆவது பட்டமளிப்பு விழா: 349 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்- Dinamani

சுடச்சுட

    

    பெரியார் பல்கலைக்கழகத்தில் 16-ஆவது பட்டமளிப்பு விழா: 349 பேருக்கு பட்டம் வழங்கினார் ஆளுநர்

    By ஓமலூர்,  |   Published on : 15th October 2016 11:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பிடம் பெற்ற 349 மாணவ - மாணவியருக்கு தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் பட்டங்களை வழங்கினார்.
     பெரியார் பல்கலைக்கழகத்தின் 16-ஆவது பட்டமளிப்பு விழா, பெரியார் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ் விழாவில் கலந்து கொள்வதற்காக, திருச்சியில் இருந்து தனி ஹெலிகாப்டரில் ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ், சேலம் உருக்காலைக்கு வந்தார். அங்கு, மாவட்ட ஆட்சியர் வா.சம்பத், உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, கார் மூலம் ஆளுநர் வித்யாசாகர் ராவ், பெரியார் பல்கலைக்கழகத்துக்கு வந்தார்.
     துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தலைமையில், ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து, பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆளுநர் வித்யாசாகர் ராவ், பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, வாத்தியங்கள் முழங்க, ஆட்சிப் பேரவை மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விழா மேடைக்கு வந்தார்.
     விழாவில், துணைவேந்தர் சி.சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் விழா சிறப்புரை ஆற்றினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
     இதனையடுத்து, 202 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்பில் 147 பட்டதாரிகள் என 349 மாணவ - மாணவியருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தங்கப் பதக்கத்துடன் பட்டச் சான்றிதழை வழங்கினார்.
     மேலும், பெரியார் பல்கலைக்கழக இணைவுப் பெற்ற கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்பில் 45,167, பல்கலைக்கழக துறைகளில் இளநிலை, முதுநிலை, ஆய்வியல் நிறைஞர் படிப்பில் 1,218, பெரியார் தொலைநிலைக் கல்வி மைய வழிப் பயின்ற 7,393 பேர் என நடப்பு கல்வியாண்டில் மொத்தம் 54,127 பேர் பட்டங்கள் பெற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai