சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுத்திட தனிச் சிறப்பு சட்டம் இயற்றிட வலியுறுத்தி சேலம் முதல் சென்னை வரை நடைபயண நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சேலம் டவுன் சுந்தர் லாட்ஜ் பேருந்து நிறுத்தம் அம்பேத்கர் சிலை அருகே வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.
இதுகுறித்த விழிப்புணர்வை கிராம மக்களிடையே ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசார நடைபயணம் நடைபெற உள்ளது.
சேலத்தில் ஜூன் 9 ஆம் தேதி துவங்கும் இந்த பிரசார நடைபயணம் ஜூன் 23 ஆம் தேதி வரை 15 நாள்கள் 368 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இறுதி நாளான ஜூன் 23 ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பயணத்தை நிறைவு செய்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் பி.சம்பத், பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக மாவட்டச் செயலாளர் ஆர்.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.