மத்திய அரசின் ஜல்தூத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 408 கிராமங்களில் நீர் மேலாண்மை பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக நபார்டு வங்கி பொதுமேலாளர் ஏ.பாமா புவனேஸ்வரி தெரிவித்தார்.
கடுமையான வறட்சியால், குடிக்கக் கூட தண்ணீர் இல்லாத நிலையில், விவசாயிகளின் நிலை மிகவும் கவலைக்குரியதாக நடப்பு பருவத்தில் மாறி விட்டது. தேவைக்கும், பயன்பாட்டுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, தண்ணீர் பிரச்னையில் கிராமங்கள் தன்னிறைவு பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, நபார்டு எனப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் சார்பில் ஒரு முன்னோடி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தண்ணீர் பிரச்னையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள 200 மாவட்டங்களை மையப்படுத்தி ஜல்தூத் எனப்படும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் தண்ணீர் தூதர்கள் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு, நீர்நிலைகளின் தற்போதைய நிலை, வயல்வெளிகள், சமவெளிகள் மற்றும் வீடுகளில் மழை நீரை முழுமையாக சேமிக்கத் தேவையான தகவல்கள் குறித்து எடுத்துரைத்து, கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.
மேலும், இயற்கை நீருற்றுகளை புதுப்பித்தல், மலைப் பகுதிகளில் உள்ள நீரூற்றுப் பகுதிகளில் நீர் செறிவூட்டுதல், அதிகரிக்கப்பட்ட நீர்ப்பாசனத் திறனுக்கு நிலத்தடி நீரை மறு செறிவூட்டல், மழை நீர் சேகரிப்பினை வலியுறுத்தி, பண்ணை குட்டை, வயல்வெளி வரப்புகள், குளங்களை புதுப்பித்தல், மூங்கில் குழாய்கள் மூலமாக நீர்ப் பாசனம்,மலைப் பகுதிகளில் இயற்கையாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும் பொருள்களை உபயோகித்து நீர்ப் பாசனம், நீர்நிலைகளை புதுப்பித்து நீரைப் பாதுகாக்க நடவடிக்கை, குறைந்த நீரில் நிறைந்த மகசூல், தெளிப்பு நீர்ப் பாசனம், சொட்டு நீர்ப் பாசனம்,மண் பானை நீர்ப்பாசனம் ஆகியவை குறித்து விவசாயிகள்,பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் நீர்த் தூதர்கள் தங்களது விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் ஜல்தூத் திட்டத்தின் தொடக்க விழா ஓமலூர் அருகேயுள்ள பச்சனம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் பொது மேலாளர் ஏ.பாமா புவனேஸ்வரி ஜல்தூத் திட்டத்தை தொடங்கி வைத்து, தண்ணீர் தூதுவர்களுக்கான கையேட்டினை வெளியிட்டார். தண்ணீர் தூதுவர்களுக்கான உபகரணங்களையும் அவர் வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மத்திய அரசின் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், தமிழகத்தில் 6500 கிராமங்களில் தண்ணீர் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
சேலம் மாவட்டத்தில் 408 கிராமங்களில், தண்ணீர் தூதுவர்கள் தங்கள் பணியை வரும் 25-ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளனர்.
பருவமழை தொடங்க உள்ள நிலையில், பெய்யக்கூடிய மழை நீரை முழுமையாக சேமிப்பது குறித்தும், நீர்ப் பாசனத் திட்டங்கள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் நபார்டு வங்கி பொதுமேலாளர் ஏ.பாமா புவனேஸ்வரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.