எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக்கூறி மருத்துவரிடம் ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக இருவரை சேலம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ரவிசுதன். அதே பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.ராஜனை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், தனது மகன் கார்த்திக் சுதன் 2015-16 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் 1064 மதிப்பெண் பெற்றிருந்தார்.
சேலம் ஐந்து சாலைப் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மூலம் கோவை பீளமேடு பகுதியில் கணினி மையம் நடத்தி வரும் ஸ்ரீநாத் என்பவர் அறிமுகமானார். இவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.76 லட்சம் கேட்டார்.
இதை நம்பிய நான் ரூ.76 லட்சத்தை ஸ்ரீநாத் மற்றும் சுரேஷ்குமாரிடம் கொடுத்தேன். ஆனால், மருத்துவப் படிப்புக்கான சீட் வாங்கித் தராமல் போலிக் கடிதம் அனுப்பி ஏமாற்றினார். மேலும் ஸ்ரீநாத் பணத்தைத் திருப்பித் தராமல் உள்ளார்.
எனவே ஸ்ரீநாத் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அகிலா மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக, மாவட்டக் குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ்குமார் விசாரணை நடத்திட உத்தரவிடப்பட்டது. விசாரணையில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி நடந்தது தெரியவந்தது.
இதில் எம்.பி.பி.எஸ். சீட் வாங்கித் தருவதாகப் பெறப்பட்ட மொத்த தொகையில் சேலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ரூ.11 லட்சத்தையும், மீதமுள்ள ரூ.65 லட்சம் பணத்தை ஸ்ரீநாத்தும் பிரித்து எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீநாத் மற்றும் அவரது மனைவி அகிலா, சுரேஷ்குமார் ஆகியோர் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் ஸ்ரீநாத் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதனிடையே ஸ்ரீநாத்தின் மனைவி அகிலா மற்றும் சேலத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகிய இருவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.