13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
By ஆத்தூர், | Published On : 13th April 2017 09:51 AM | Last Updated : 13th April 2017 09:51 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த ஆறகளூரில் 13-ஆம் நூற்றாண்டு வணிகக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் கோட்டைக்கரை என்ற இடத்துக்கு அருகே ராமனின் விளைநிலத்தில் வரப்பின் மீது அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையத் தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான பொன்.வெங்கடேசன் ஆய்வு செய்தார். அப்போது, அது 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது.
இந்தக் கல்வெட்டில் உள்ள 16 வரிகள் குறித்து வெங்கடேசன் கூறியதாவது:-
"ஸ்வஸ்திஸ்ரீ களப்பாளராயனும், புரவாரியாருக்கு' என கல்வெட்டு துவங்குகிறது. சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்துள்ள களப்பாளராயர் என்பவர் நிலங்களை நிர்வகித்து வந்துள்ளார். புரவாரியார் என்பவர் வரிக்கணக்கை சரி பார்க்கும் அலுவலர்.
அப்போது வாழ்ந்த வணிகர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டியை வரியை செலுத்த தேவையில்லை. இதற்கு பதிலாக வடக்கில் வாயிலில் உள்ள உலகம் காத்த சோளீசுரமுடைய நாயனாருக்கு ஒன்பதாவது தை மாதம் முதல் பூஜைக்கும், திருப்பணிக்கும் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இறுதியில் தன்ம தாவளம் என்ற சொல் உள்ளது. தாவளம் என்பது ஒரு மிகப் பெரிய வணிக நகர். ஆறகழூரில் 12-ஆம் நூற்றாண்டில் மகதைப்பெருவழி என்ற வணிக வழிப் பாதை இருந்துள்ளதற்கு ஆதாரமாய் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலில் ஒரு மைல் கல் இருந்துள்ளது. அதில், "ஸ்வஸ்திஸ்ரீ மகதேசன் பெருவழி காஞ்சிபுரம்' என கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒரே அளவிலான 16 குழிகள் வெட்டப்பட்டுள்ளன.
இந்தக் குழிகள் ஆறகழூரிலிருந்து காஞ்சிபுரத்துக்கு உள்ள தொலைவை குறிக்கிறது. இந்த மைல்கல் இப்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. வணிக கல்வெட்டில் தன்மதாவளம் என்று வருவது போல் தருமபுரி அதியமான் பெருவழியில் நாவற்தாவளம் என்ற சொல் வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சேலம் மல்லூர் அருகே வேம்படி தாவளம் என்ற ஊரும் உள்ளது.
ஆறகழூரில் உள்ள இந்தக் கல்வெட்டின் அருகே உள்ள வயலில் சென்ற ஆண்டு ஒரு சமண கோயிலும், சமணப்பெரும்பள்ளியும் இருந்ததற்கான வணிகக்குழு கல்வெட்டு கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது.
15-ஆம் நூற்றாண்டின் வணிகக் கரண்டியும் கண்டுபிடிப்பு: இதையடுத்து, தொடர் ஆய்வின் மூலம் ஆறகழூர் காமநாதீசுவரர் கோயிலை ஒட்டி உள்ள வளையல்காரர் தெருவில் தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும், இவர்களுக்கு சொந்தமான மடத்தில் 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் ஒரு வணிகக் குழு கரண்டி இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்தக் குடும்பத்தை சார்ந்தவர்கள் வழக்குகளை விசாரிக்கும்போது, இந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்து தீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்துள்ளது. திருவிழாக்கள் நடக்கும்போது இந்தக் கரண்டியை எடுத்துச் சென்று நன்கொடை வசூலித்துள்ளார்கள்.
மணி ஒன்றுடன் சங்கிலியால் இணைக்கப்பட்டுள்ள கரண்டியின் முனையில் வட்டவடிவமான குழி காணப்படுகிறது, அதை அடுத்து லிங்கமும், விநாயகரும் சிறிய அளவில் உள்ளது. சூரிய கடவுள் பெரிய அளவில் காட்டப்பட்டுள்ளது. இரு கரங்களிலும் அமிர்த கலசம் உள்ளது. கைப்பிடி உள்ள பகுதியில் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வணிகக் குழு சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன.
இந்தச் சான்றுகள் மூலம் ஆறகழூர் ஒரு வணிக நகரமாக இருந்தது உறுதியாகிறது. 12-ஆம் நூற்றாண்டில் பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் ஆறகழூரை தலைநகராக கொண்டு மகதை நாட்டை ஆட்சி செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என்றார்.