ஆத்தூரில் 3 நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படும் என ஆத்தூர் நகராட்சி ஆணையர் க.கண்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர் ஆலோசனைக் கூட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பி.இராஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். மேலும் குடிநீர் தட்டுப்பாடு வராமல் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளுக்கு குடிநீரை சரியாக விநியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் பணிகள் நிறைவடைந்தால் ஆக. 25-ஆம் தேதிக்கு மேல் இரண்டு நகராட்சிகளுக்கும் தினம் சுமார் 45 முதல் 50 லட்சம் லிட்டர் வரை கொடுக்கப்படும். இந்த நிலை வந்தால் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும். மேலும் முதல்வரின் அறிவுறுத்தலின்படி சுமார் ரூ.50 கோடியில் குடிநீர்க் குழாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் க.கண்ணன் தெரிவித்தார்.
கூட்டத்தில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, ஆத்தூர் முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் அ.மோகன், நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர்கள், ஆத்தூர் நகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.