சிறந்த காவல் நிலைய தேர்வுக்காக சேலம் டவுன் காவல் நிலையம் திங்கள்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
நாடு முழுவதும் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் சிறந்த காவல் நிலையம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் சரகத்தில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் சேலம் டவுன் காவல் நிலையம் சிறந்த காவல் நிலைய தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
சேலம் மாநகர காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வரவேற்பறை, பொதுமக்கள் நாளிதழ் படிக்க வசதி, கண்ணைக் கவரும் பூஞ்செடிகள், மரத்தடியில் அமர போதிய வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை காவல் பயிற்சிக் கல்லூரி முதல்வரும், எஸ்.பி.யுமான மணி திங்கள்கிழமை சேலம் டவுன் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் 10 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் சிறந்த காவல் நிலையத்தை தேர்ந்தெடுத்து தில்லிக்கு அனுப்பி வைப்போம். இதில் 3 எஸ்.பி.க்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். காவல் நிலைய கட்டமைப்பு, பதிவான வழக்குகள், வழக்குகள் மீதான தீர்வு, பாதிக்கப்படும் மக்களுக்கான உதவி ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படும் என்றார்.
ஆய்வின் போது துணை ஆணையர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை, உதவி கமிஷனர்கள் பாலசுப்பிரமணி, இளங்கோ, இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.