2,000 அரசு பேருந்துகள் நிறுத்தம்: சிஐடியூ மாநில தலைவர் அ.சௌந்தரராஜன்

தனியார் பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு அளிப்பதால், 2000 அரசு பேருந்துகள்

தனியார் பேருந்துகளுக்கு அதிக முக்கியத்துவத்தை தமிழக அரசு அளிப்பதால், 2000 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன என சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  இதில் பங்கேற்ற அ.சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியது:-
   போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் தீபாவளி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.  போனஸ்,  பண்டிகை முன்பணம் தர அரசு முன்வந்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. வரும் காலங்களில் போராட்டம் காலவரையற்ற முறையில் நடைபெறும்.
போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வரவேண்டிய ரூ.7 ஆயிரம் கோடி நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
 தனியார் பேருந்துகளை ஊக்கப்படுத்தும் தமிழக அரசின் செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். 
தமிழகத்தில் 22 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில்,  கடந்த ஒன்றரை மாதங்களில் 19, 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.  தற்போது 2000 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 
புதிய பேருந்து நிலையங்களையும், புதிய வழித்தடங்களையும் உருவாக்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தொழிலாளர்களின் போராட்டத்தை நிறுத்த தமிழக அரசு நீதிமன்றத்தை நாடினாலும்,  போராட்டத்தை கைவிட மாட்டோம்.  நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக்கூறி போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம்.
    போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு  வரவேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.   தொழிலாளர்களின் ஓய்வூதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகமே நிர்வாகிக்க வேண்டும். அரசு பேருந்துகளில் உள்ள வரவுக்கும் செலவுக்கும் ஆன வித்தியாசத்தை அரசே ஈடுகட்ட வேண்டும். அரசு போக்குவரத்துத் துறையை லாபம் நஷ்டம் பார்க்காமல் மக்களின் பயன்பாட்டுக்குச் செயல்படுத்த வேண்டும்.
கஜா புயல் நிவாரணம் தேவை:  தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பில் அதிகமாக தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.  மாநில அரசு விவசாயத்தைப் பாதுகாக்க அந்தந்தப் பகுதிகளில் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு பேரிடர் கால நிவாரணங்களை வழங்க வேண்டும். 
ஜனவரியில் வேலைநிறுத்தம்:
மத்திய அரசின் தவறானக் கொள்கையால் அன்னியச் செலாவணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  பண மதிப்பு நீக்கம்,  தனியார் மயம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு எதிராகவும் கடந்த 4 ஆண்டுகளில் இருந்துள்ளது. 
குறிப்பாக,  பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் பிரச்னைகள்,  தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தல், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, பொதுத் துறை நிறுவனங்களைப் பாதுகாத்திடல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,  வரும் ஜனவரி 8, 9 ஆகிய தேதிகளில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம், பல கட்டப் போராட்டங்கள் நடைபெற உள்ளன. இதில்,  சிஐடியூ, ஏஐடியூசி, தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் மத்திய,  மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்கின்றனர்  என்றார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆறுமுக நயினார் , பொருளாளர் தயானந்தன், துணைத் தலைவர்கள் எம். சந்திரன்,  அன்பழகன், சாலை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தின் சம்மேளன துணைத் தலைவர் எஸ். கே. தியாகராஜர், சிஐடியூ மாவட்டச் செயலர் டி. உதயகுமார், மாவட்டத் தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் வி. இளங்கோ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com