சங்ககிரியில் மக்கள் நீதிமன்றம்: 206 வழக்குகள் ரூ. 3. 40 கோடி மதிப்பீட்டில் சமரசத் தீர்வு

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நான்கு தலைமுறைகளாக 37 ஆண்டுகளாக நிலுவையில்


சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் நான்கு தலைமுறைகளாக 37 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாகப் பிரிவினை வழக்கு உள்பட 206 வழக்குகள் ரூ. 3.40 கோடி மதிப்பீட்டில் சமரசமாக முடித்து வைக்கப்பட்டன.
சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சார்பு, மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.1, எண். 2 ஆகிய நான்கு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன.
இவ் வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்ப நல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள நிலுவை கடன்கள் உள்ளிட்ட 206 வழக்குகள் ரூ. 3 கோடியே 40 லட்சத்து 76 ஆயிரத்து 172 மதிப்பீட்டில் சமரசமாக செய்து வைக்கப்பட்டன.
சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான இ. ராஜேந்திர கண்ணன் தலைமை வகித்து மக்கள் நீதிமன்ற பணிகளைத் தொடக்கி வைத்தார்.
மாவட்ட உரிமையியல் நீதிபதி எம். பாக்கியம், 2-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி எம். ஜெயமணி, ஓய்வுபெற்ற சார்பு நீதிபதி பி. ராஜாராம், மூத்த வழக்குரைஞர்கள் என். சண்முகசுந்தரம், என்.எஸ். அண்ணாதுரை, எஸ். கிறிஸ்டோபர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆறு அமர்வுகளில் வழக்குகள் சமரசத்துக்கான பணிகள் நடைபெற்றன.
37 ஆண்டு பாகப் பிரிவினை வழக்கு சமரசம்: சங்ககிரி கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி கவுண்டர் இவர், காலாமான பிறகு இவரது வாரிசுகள் 5 பேர், சுப்பண்ண கவுண்டர் உள்பட 31 பேர் மீது 40 ஏக்கர் நிலம் குறித்து பாகப்பிரிவினை கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் சுப்பண்ண கவுண்டனர் காலமானதற்கு பின்னிட்டு இவருடைய வாரிசுகள் மற்றும் சிலர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு 1981 ம் ஆண்டில் இருந்து இவ்வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றம், சங்ககிரி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று பின்பு நீதிமன்ற உத்தரவையடுத்து எல்லை வரையரை மற்றும் நிலமதிப்பீட்டின் அடிப்படையில் சங்ககிரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. 37 ஆண்டுகள் நிலுவையில் இருந்த வழக்கு மூன்று தலைமுறைக்கு பின்னர் நான்காவது தலைமுறையில் இவ் வழக்கு மக்கள் நீதிமன்றத்தில் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com