டிச.13 இல் சேலம் மாநகராட்சியில் ரூ.198 கோடியில் சீர்மிகு நகர திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: முதல்வர் பங்கேற்பு

சேலம் மாநகராட்சியில் ரூ. 198 கோடியில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட பணிகளுக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளைத் துவக்கியும் வைக்கிறார்.


சேலம் மாநகராட்சியில் ரூ. 198 கோடியில் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்ட பணிகளுக்கு வரும் டிசம்பர் 13-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளைத் துவக்கியும் வைக்கிறார்.
சீர்மிகு நகரத் தேர்வு பட்டியலில் சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டு, சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளுவதற்காகத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இதில் ரூ. 92 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையம் அதி நவீன இரண்டடுக்கு பேருந்து நிலையமாக பன்னாட்டு தரத்தில் மாற்றியமைத்தல், ரூ.165 கோடி மதிப்பீட்டில் பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம் மற்றும் நேரு கலையரங்கை சீரமைத்தல், ரூ. 81 கோடி மதிப்பீட்டில் நகர் முழுமைக்கும் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம், ரூ. 47 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு சாலைகள் அமைத்தல், ரூ. 114 கோடி மதிப்பீட்டில் பகுதி அடிப்படையிலான திட்டப் பகுதிகளில் புதை சாக்கடை கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், ரூ. 30 கோடி மதிப்பீட்டில் பொன்னம்மாபேட்டை பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்தல் என 25 திட்டப் பணிகள் ரூ. 1,000 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதைத் தொடர்ந்து முதல்கட்டமாக ரூ. 92 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலையத்தை ஈரடுக்கு பேருந்து நிலையமாக மாற்றியமைக்கும் பணிகள், ரூ. 18 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் திருமணிமுத்தாற்றின் கரைகளை மேம்படுத்துதல், ரூ. 7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல், ரூ. 4 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் என ரூ. 166 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 5 நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் மற்றும் ஸ்மார்ட் மரம் மற்றும் கல்வி நிதியின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் மற்றும் குடுமியான் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைக்கிறார்.
மேலும் ரூ. 26 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதை சாக்கடை திட்டம் மற்றும் தனிக்குடிநீர் திட்டம் நிறைவுற்ற பகுதிகளில் 110 சாலைகள் மறு சீரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.198 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை முதல்வர் துவக்கி வைக்கிறார்.
விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமை வகிக்கிறார். இதை முன்னிட்டு சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது சேலம் எம்.பி. வி.பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ-க்கள் ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், செயற்பொறியாளர் ஜி.காமராஜ், உதவி ஆணையாளர் ஏ.ஆர்.ஏ.ஜெயராஜ், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.செந்தில்குமார், கே.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com