பதிவாளர் தற்கொலை வழக்கு: முன்னாள் துணைவேந்தர் உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜர்

சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கில் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் மத்தியக் குற்றப் பிரி


சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதிவாளர் அங்கமுத்து தற்கொலை வழக்கில் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் விசாரணைக்கு ஆஜரானார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே தோப்புபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளராகப் பணியாற்றி வந்த இவர், கடந்த 2017 டிசம்பர் மாதம் வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். துணைவேந்தர் தேர்வுக் குழுவில் 10 பேர் பட்டியலில் அங்கமுத்து இடம் பெற்றிருந்த நிலையில், அவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்கொலைக்கு யார் காரணம்? என்பது குறித்தும் அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.இதுகுறித்து பெருந்துறை போலீஸார் விசாரணை நடத்தினர். இதனிடையே அங்கமுத்துவை தற்கொலைக்குகஈ தூண்டியதாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்பட 7 பேர் மீது பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் சேலம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சதீஷ் விசாரித்து வருகிறார். இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்பட 15 பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்தாருடன் போலீஸில் ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது என மத்தியக் குற்றப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:
இந்த வழக்கு விசாரணைக்காக சம்மன் அனுப்பி வைக்கப்பட்ட 15 பேரில் ஒவ்வொருவரும் குடும்பத்தாருடன் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். இந்த விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com