விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

ஓமலூர் விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தொகை கேட்டு வட்டாட்சியரிடம்


ஓமலூர் விமான நிலைய விரிவாக்க விவகாரத்தில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு தொகை கேட்டு வட்டாட்சியரிடம் வலியுறுத்தினர்.
சேலம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக பொட்டியபுரம், தும்பிப்பாடி, காமலாபுரம், சிக்கனம்பட்டி கிராமங்களில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய நிலமற்ற வீடுகளை மட்டும் கொண்டுள்ள சிக்கனம்பட்டி, குப்பூர் பகுதி மக்களும், ஒரு சில விவசாயிகளும் தாங்களாகவே முன்வந்து, நிலங்களை ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து பொட்டியபுரம், காமலாபுரம், சிக்கனம்பட்டியில், நில அளவீடு முடிந்த நிலையில், தும்பிப்பாடி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ரோகிணி உத்தரவால், காடையாம்பட்டி வட்டாட்சியர் மகேஸ்வரி தும்பிப்பாடி சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை விவசாயிகளை சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், எந்தக் காரணத்தை கொண்டும் விவசாய நிலங்களைக் கொடுக்க மாட்டோம்.
மேலும், தற்போது உள்ளதைவிட, நிலத்தின் வழிகாட்டி மதிப்பை அதிகரித்து வழங்கிட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும். கரடு பகுதியில் மாற்று இடம் வழங்குவதைத் தவிர்த்து, மக்கள் நடமாட்டமுள்ள பகுதி மற்றும் ரியல் எஸ்டேட் வீட்டு மனை பிரிவுகளை வழங்க வேண்டும்.
குறிப்பாக சேலம், ஓமலூர் நகரப் பகுதியில் வீட்டுமனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகேஸ்வரி உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com