தொடர்ந்து 10 மணி நேரம் கவிதைகள் எழுதி சிறுவன் சாதனை

வாழப்பாடியில் தொடர்ந்து 10 மணி நேரம் 173 தலைப்புகளில் கவிதைகள் எழுதி, அரசுப் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.

வாழப்பாடியில் தொடர்ந்து 10 மணி நேரம் 173 தலைப்புகளில் கவிதைகள் எழுதி, அரசுப் பள்ளியில் படிக்கும் 10 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் செல்வகுமார்-விஜயலட்சுமி தம்பதியரின் மகன் மதுரம் ராஜ்குமார் (10), வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
இளம் வயதிலேயே கவிதை எழுதும் திறன்கொண்ட இவர், பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் நான்காம் வகுப்பு படிக்கும் போதே, "நல் விதையின் முதல் தளிர்' என்ற கவிதை நூலை வெளியிட்டு அனைத்து தரப்பினரின் பாராட்டுதலையும், பல்வேறு அமைப்பின் விருதுகளையும் பெற்றார். 
இதனைத் தொடர்ந்து, "யுனிவர்சல் அச்சூவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் தலைவர் பாபு பாலகிருஷ்ணன், முதன்மை செயல் இயக்குநர் உமா ஆகியோர் முன்னிலையில், வாழப்பாடியில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து 10 மணி நேரம் 173 தலைப்புகளில் கவிதைகள் எழுதி உலக சாதனை படைத்துள்ளார்.
சாதனை படைத்த மதுரம் ராஜ்குமாருக்கு, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் ஜோதி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஐ.சுரேஷ். க.ஜெயலட்சுமி, பள்ளித் தலைமையாசிரியை சத்தியக்குமாரி மற்றும் பசுமை இயக்கம், நெஸ்ட் அறக்கட்டளை, இலக்கியப் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுவன் மதுரம் ராஜ்குமார் கூறியதாவது: எனது பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால் சிறுவயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றேன். நான் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும், எனது பெற்றோர் சரியான பதிலை தேடித் தந்தனர். சிறுவயதிலேயே நான் உலக சாதனை படைப்பதற்கு, எனது பெற்றோர், பள்ளி ஆசிரியர்கள், சக மாணவ-மாணவியர்களும் தொடர்ந்து ஊக்கமளித்தனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com