அவினாசியில் கடத்தப்பட்ட லாரி ஓமலூர் அருகே மீட்பு
By DIN | Published on : 14th July 2018 07:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அவினாசி அருகே கடத்தப்பட்ட லாரியை ஓமலூர் அருகே போலீஸார் மீட்டுள்ளனர்.
சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பாக மர்மமான முறையில் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை நின்றுகொண்டு இருந்தது. இந்த லாரி குறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் சூரமங்கலம் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கே வந்த போலீஸார் லாரியை ஆய்வு செய்தனர். அப்போது இந்த லாரி திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த நாவலடி பவுல்டரி கம்பெனிக்கு சொந்தமானது என்பதை அறிந்து, லாரியின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவினாசி போலீஸாருடன் லாரியின் உரிமையாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அவர்கள் கூறும்போது, கடந்த 11-ம் தேதி திருச்செங்கோட்டில் இருந்து சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஒரு லட்சத்து 20 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு கோவை வழியாக கேரளத்துக்கு லாரி சென்றது. இந்த லாரியில் ஓட்டுநர் பொன்னுசாமி உள்பட லாரி கிளீனர், லோடு ஏற்றுபவர் ஆகிய மூன்று பேர் லாரியில் சென்றனர். இந்தநிலையில், லாரி ஓட்டுநர் ஓய்வு எடுப்பதற்காக அவினாசி பிரிவு சாலையில் நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர்.
அப்போது அங்கே காரில் வந்த ஒரு கும்பல் லாரி ஓட்டுநர் உட்பட மூவருடன் லாரியைக் கடத்தியது. பின்னர் மூவரையும் அடித்து கீழே தள்ளிவிட்டு முட்டையுடன் லாரியைக் கடத்திச் சென்றுள்ளது.இதையடுத்து லாரி கடத்தல் குறித்து அவினாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில், சூரமங்கலம் போலீஸார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் வந்த அவினாசி போலீஸார் லாரியை ஆய்வு செய்தனர்.அப்போது முட்டைகள் இல்லாமல் காலியாக லாரி நின்று கொண்டு இருந்தது. இதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் லாரியில் உள்ள விரல்ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், லாரியில் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற தடயங்களையும் போலீஸார் சேகரித்தனர்.
இதைத்தொடர்ந்து, லாரியைக் கடத்திய கும்பல் குறித்து ஓமலூர் வட்டாரக் கிராமத்தில் தேடினர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். விரைவில் லாரியைக் கடத்திய கும்பலைப் பிடித்து விடுவோம் என்று அவினாசி போலீஸார் தெரிவித்தனர்.