சுடச்சுட

  

  சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

  By  சேலம்,  |   Published on : 13th June 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
   சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சர்வதேச சிறார் தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தின விழா மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   இதில், ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது: சேலம் மாவட்டத்தில் சிறார் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக மாற்ற தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
   14 வயதுக்குள்பட்ட வளர் இளம் குழந்தைகளுக்கு எந்த ஒரு அபாயகரமான தொழில்களிலும் ஈடுபடுத்தாமல் இருக்க சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
   அந்த வகையில், ஒவ்வொரு குழந்தையும் 14 வயது வரை கட்டாயக் கல்வி பெறுவது அவர்களது உரிமையாகும்.
   சேலம் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொழிலாளர் நலத்துறை, தேசிய குழந்தைகள் தொழிலாளர் திட்டம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்தாலோசித்து, சேலம் மாவட்டத்தை சிறார் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு திட்டங்களின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
   மாவட்டத்தில் தமிழகம் மற்றும் வெளி மாநிலத்தைச் சார்ந்த குழந்தைகள் யாரும் சிறார் தொழிலாளர்களாக பணியமர்த்தப்படுவதில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறார் தொழிலாளர்கள் தொடர்பாக விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே சிறார் தொழிலாளர்கள் முறையை முற்றிலும் ஒழிக்க முடியும்.
   14 வயதுக்குள்பட்ட குழந்தைகளை எந்த இடங்களிலும் தொழிலாளர்களாக பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு எங்காவது பணியமர்த்தப்பட்டிருப்பது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் முதெரிவிக்க வேண்டும்.
   சிறார் தொழிலாளர்கள் உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், மளிகைக் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவது தெரியவந்தால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம். மேலும் பணி அமர்த்தப்பட்ட சிறார்களை மீட்டு அவர்களுக்கு அரசின் மூலம் தேவையான உதவிகளை வழங்கி பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
   சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 6 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர். அனைத்துக் குழந்தைகளுக்கும் 1098 என்ற இலவச தொலைபேசி எண் தெரியபடுத்தப்பட்டுள்ளது.
   மாவட்டத்தில் உள்ள அனைவரும் கூட்டுமுயற்சியாக ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சிறார் தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக மாற்ற முடியும் என்றார்.
   முன்னதாக, வளரிளம் பருவத்தினருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியினை தொடக்கி வைத்து, வெள்ளிப் பட்டறையில் 18 வயதுக்குள்பட்ட சிறார் மற்றும் வளரிளம் பருவத்தினர் எவரையும் பணிக்கு அமர்த்தவேண்டாம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.
   சிறார் தொழிலாளர் முறை தீமைகள் குறித்து நடத்தப்பட்ட பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, சிறார் தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான கூட்டாய்வின் போது மீட்கப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்த்த குழந்தைகளுக்கு ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
   நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ஆ.திவ்யநாதன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்ச்சித் துறை துணை இயக்குநர் ஓ.எஸ்.ஞானசேகரன், தேசிய குழந்தை தொழிலாளர்கள் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் (பொ) மாவட்ட ஊராட்சி செயலர் எஸ்.விஜயகுமாரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai