சேலம் மாவட்டப் பகுதிகளில் மலையேற்றப் பயிற்சிக்குத் தடை: மாவட்ட வன அலுவலர் பெரியசாமி

சேலம் மாவட்ட மலைப் பகுதியில் மலையேறும் பயிற்சி கோடை காலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட மலைப் பகுதியில் மலையேறும் பயிற்சி கோடை காலம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
 தேனி மாவட்டம், குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மலையேற்றம் சென்ற 10 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, தமிழகம் முழுவதும் மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்கான விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 சேலம் மாவட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஏற்காடு, குண்டூர், ஆனைவாரி முட்டல், வழுக்குப் பாறை உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மலையேறும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில், மாவட்ட மலைப் பகுதிகளில் மலையேற்றத்துக்கு கோடை காலம் முழுவதும் தடை விதித்து மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.
 இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சேலம் மாவட்டத்தில் 9 வனச் சரகத்தில் உள்ள சேர்வராயன், பச்சமலை, ஜருகுமலை, கல்வராயன் மலை, கஞ்சமலை உள்ளிட்ட மலைகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டேர் வனப் பரப்பு உள்ளது. இங்கு அரிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்கள் உள்ளன.
 இங்கு கோடை காலத்தில் தீவிபத்து ஏற்படக்கூடிய இடங்களில் 274 கி.மீ. தொலைவுக்கு 6 மீ. அகலத்தில் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தீத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள தாற்காலிக பணியாளர்கள் 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர வனத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ரூ.2.5 லட்சத்தில் தீத் தடுப்பு சாதனங்கள் வாங்க உள்ளோம். இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 தமிழகத்தில் பொதுவாக புலிகள் காப்பகம், சரணாலயங்களில் தான் கோடை காலங்களில் நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு வனத் துறை சுற்றுலாவுக்கு தடை விதிப்பது வழக்கம். தற்போது குரங்கணி காட்டுத் தீ விபத்து உயிரிழப்பைத் தொடர்ந்து, மாவட்டப் பகுதிகளில் உள்ள மலைப் பகுதிகளில் மலையேற்றத்துக்கு வனத்துறை முதன்முறையாக தடை விதித்துள்ளது.
 அந்த வகையில், கோடை காலம் முடியும் வரை சேலம் மாவட்டத்தில் மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்கும், விலங்கு மற்றும் பறவைகளை காண்பதற்காக சூழல் சுற்றுலா மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 மேலும், மலைப் பகுதிகளில் தீ பரவக்கூடிய வகையில் யாரேனும் நடந்து கொண்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோடை காலத்தில் வனப் பகுதிகளில் இரவு, பகலாக ரோந்து மேற்கொள்ளவும் வனத் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 கிராம வனக் குழுக்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு தீத்தடுப்பு பணிக்காக அவர்களது ஒத்துழைப்பையும் பயன்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனப் பகுதியில் கோடை காலத்தில் விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com