Enable Javscript for better performance
சேலம் வழியாக கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    சேலம் வழியாக கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் குட்கா பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 24th March 2018 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக கோவைக்கு தக்காளிக் கூடைகளில் மறைத்து வைத்து, லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
    பெங்களுரில் இருந்து சேலம் வழியாகத் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, சேலம் அருகே கோட்டகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை நள்ளிரவு காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    இதில் லாரியின் பின்பகுதியில் தக்காளிக் கூடைகளை வைத்து, உள் பகுதியில் மூட்டை, மூட்டையாக குட்கா பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொண்டதில், ரூ.20 லட்சம் மதிப்பிலான 75 மூட்டைகளில் 7 லட்சம் பாக்கெட் பான்பராக் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர், அந்தப் பொருள்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, லாரியின் ஓட்டுநர் எம்.ராஜேந்திரன்(31) மற்றும் லாரி உரிமையாளர் எம்.மாதேஷ் (32) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பெங்களூரில் இருந்து கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் விநியோகிப்பதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, குட்கா பொருள்களை வாங்கி விற்பனை செய்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூரில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அதிக அளவில் கடத்தி வரப்பட்டு, சேலம் மற்றும் கோவை, ஈரோடு மாவட்டங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    இதுகுறித்து போலீஸார் கூறுகையில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன. எந்தப் பகுதியில் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai