Enable Javscript for better performance
வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து நீர் திறப்பை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து நீர் திறப்பை நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை

    By DIN  |   Published on : 24th March 2018 05:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் கெங்கவல்லி அருகேயுள்ள வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    இதையடுத்து ஆட்சியரின் உத்தரவுப்படி வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனைக் கண்டித்து கடந்த 20-ஆம் தேதி , கெங்கவல்லி அண்ணா சிலை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அதன்பின்னர் மீண்டும் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. மீண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்ததையடுத்து, மார்ச் 22-ஆம் தேதி காலை ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு கெங்கவல்லி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
    தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு குழுவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் கூறியது:
    கெங்கவல்லி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பகுதி மக்களுக்கு குடிநீர் வலசக்கல்பட்டி ஏரியிலிருந்துதான் கிடைக்கிறது. இந்தநிலையில் வியாழக்கிழமை மாலை வலசக்கல்பட்டி ஏரியிலிருந்து ,விவசாயத்துக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர் ஆதாரம் குறையத் தொடங்கியுள்ளது. அதனால் வலசக்கல்பட்டி ஏரியில் இருந்து நீர் திறந்துவிடுவதை நிறுத்திட வேண்டும் என்றனர்.
    இதுகுறித்து கெங்கவல்லி வட்டாட்சியர் வரதராஜ் கூறியது: பொதுப்பணித் துறை விதிகளின்படி, ஏரி நீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் 9 நாள் திறந்துவிடவேண்டுமென்று கோரினர். நாங்கள் 3 நாள்கள் மட்டுமே திறந்துவிடுவதாகக் கூறி திறந்துள்ளோம். ஏரியில் தண்ணீர் நிரம்பிவிட்டது. மேலும் கெங்கவல்லி பகுதியில் அடுத்த ஒன்றரை மாதத்துக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. அதனால் பொதுமக்கள் குடிநீர் அபாயம் ஏற்படும் என்று அச்சப்படத்தேவையில்லை என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai