Enable Javscript for better performance
சேலம்-சென்னை விமானக் கட்டணம்: பயணிகள் அதிருப்தி- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானச் சேவை தொடங்கிய சில நாள்களிலேயே பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  
    சேலத்தை அடுத்த ஓமலூர் காமலாபுரம் விமான நிலையம் தொடங்கப்பட்டு 1993,  2011 -ஆம் ஆண்டுகளில் விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது போதிய வருவாய் இல்லாதது போன்ற காரணங்களால் அச்சேவை நிறுத்தப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளுக்குப் பின்னர்,  மத்திய அரசின் உடான் திட்டத்தில் மார்ச் 25 - ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவையை "ட்ரூஜெட்' நிறுவனம் தொடங்கியுள்ளது.  இத்திட்டத்தில் 36 இருக்கைகள் கொண்ட விமானத்தில் முதல் 3 மாதங்களுக்கு  தலா ரூ.1,499 மட்டுமே பயணக் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  சேவை தொடங்கி ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், கடைசி நேரத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணமாக ரூ.1,499 முதல் ரூ.8,500 என ட்ரூஜெட் நிறுவனம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.
    இதுதொடர்பாக,  இந்திய தொழில் வர்த்தக சபையின் சேலம் பிரிவு தலைவர் மாரியப்பன் கூறியது:
    இந்த திடீர் பயணக் கட்டண உயர்வு தொழில்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உடான் திட்டத்தில் உள்ளபடி அதிகபட்சமாக ரூ.3,000 -க்கும் மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஆனால், தற்போது கட்டணம் அதிகபட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50 நிமிட விமான சேவைக்கு ரூ.8,500 வரை வசூலிக்கும் டைனமிக் கட்டண முறையை அடுத்த 3 ஆண்டுகளுக்கு அமல்படுத்தக் கூடாது.
    சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளுக்கு 4 மணி நேர பயண சேவைக்கு ரூ.5000 -க்கு அதிகமாக கட்டணம் உள்ள நிலையில், 50 நிமிட பயணத்திற்கு ரூ.8,500 நிர்ணயித்திருப்பது ஏற்புடையதல்ல. இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai