ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை: 5 பேரை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை

சேலம்  ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட  5 பேரை சிபிசிஐடி போலீஸார்

சேலம்  ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட  வழக்கில் கைது செய்யப்பட்ட  5 பேரை சிபிசிஐடி போலீஸார் சேலம் அழைத்து வந்து  ரயில் நிலையங்களில் வைத்து விசாரணை நடத்தினர்.
சேலம்,  நாமக்கல் மாவட்டங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.323 கோடி மதிப்பிலான கிழிந்த ரூபாய் நோட்டுகளைச்  சேகரித்து, கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலம் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்தனர். 
சேலத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்ட அந்த ரயில் மறுநாள் காலை 4.15 மணி அளவில் எழும்பூர் ரயில் நிலையம் சென்று அடைந்தது. பின்னர் பணம் இருந்த பெட்டி மட்டும் சேத்துப்பட்டு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 
அங்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ரயில் பெட்டியைத் திறந்து பார்த்தபோது பெட்டியின் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 கோடி பணம் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.  
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விசாரணையை அடுத்து மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் தலைவன் மோகர்சிங்,  தினேஷ், ரோகன், பில்டியா உள்ளிட்ட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 
நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்ட அவர்களை 14 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொள்ளையர்களில் 5 பேரை சனிக்கிழமை சென்னையில் இருந்து இரண்டு வேன்கள் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் சேலத்துக்கு அழைத்து வந்தனர். 
இதையடுத்து விருத்தாசலம் ரயில் நிலையம் மற்றும் சின்னசேலம் ரயில் நிலையங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் சேலத்துக்கு அழைத்து வந்தனர்.
கொள்ளைச் சம்பவத்தின்போது, சேலத்தில் கொள்ளையர்கள் நடமாடிய சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் அயோத்தியாப்பட்டணம் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கொள்ளையர்களை வாகனத்திலேயே அமர வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது எந்த ரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் ரயில் ஏறினர் என்பது குறித்தும்,  அப்போது யார், யார் உடனிருந்தனர் என்பது குறித்தும் பல்வேறு  கோணங்களில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com