முதன்முறையாக பாட நூல்களின் அட்டையில் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை

தமிழகத்தில் சமூக ஊடகங்களினால் விபரீதங்கள் நிகழாமல் தடுப்பதற்கு பள்ளி மாணவ-மாணவியரிடையே

தமிழகத்தில் சமூக ஊடகங்களினால் விபரீதங்கள் நிகழாமல் தடுப்பதற்கு பள்ளி மாணவ-மாணவியரிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்,   பள்ளிக்கல்வித் துறை வாயிலாக வழங்கப்படும் பாட நூல்களின் பின்பக்க அட்டையில்,   தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்பாட்டு முறை மற்றும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் முதன்முறையாக அச்சிடப்பட்டுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர், இளையோர், முதியோர், படித்தவர்கள், பாமரர்கள் என  அனைத்து தரப்பினரும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி, இணையத்தில்,  வலைதளங்களில்,  சுட்டுரை, முகநூல், கட்செவி,  யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கட்டுப்பாடின்றி தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.
முன்பின் அறிமுகமில்லாத நபர்களுடன் குறுகிய காலத்துக்குள் இணையத்தில்,  சமூக ஊடகங்கள் வழியாகப் பழகி விடுவதாலும்,  தனது சுயசார்பு, தனிப்பட்ட விவரங்களையும் படங்களையும் பகிர்ந்து கொள்வதாலும்,  சமீப காலங்களாக பல்வேறு விபரீதங்கள் நிகழ்ந்து வருகின்றன.  
அவற்றை கட்டுப்படுத்துவதற்கு சைபர் கிரைம் என்ற தனிப் பிரிவு ஏற்படுத்தி,  மத்திய, மாநில அரசுகள் முழுவீச்சில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
குறிப்பாக,  பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் தகவல் தொடர்பு சாதனங்கள்,  இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதும், கட்டுப்பாடற்று  பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும்  அத்தியாவசியமாகியுள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு,  தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு பள்ளிக் கல்வித்துறை வாயிலாக பாடநூல் கழகத்தால் வழங்கப்படும் பாட நூல்களின் பின்புற அட்டைகளில்,  முதன்முறையாக செல்லிடப்பேசி,  இணையத்தைப் பயன்படுத்தும் முறைகள் குறித்தும்,  சமூக ஊடகங்கள் மற்றும் வலை தளங்களைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டியவை குறித்த "சைபர் சேப்டி'  விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 
நிகழாண்டு 5 வகுப்பு மாணவ-மாணவியருக்கு,  கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான இரண்டாம் பருவத்துக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூலின் பின்புற அட்டைகளில் தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறை மற்றும் சமூக  ஊடகங்களை பயன்படுத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சம் குறித்த விழிப்புணர்வு பரப்புரை இடம்பெற்றுள்ளன.
பாடநூல்களில் திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள்,  தனிநபர் கழிவறைகள் அமைத்தல், கைகளை முறையாக கழுவுவதால் ஏற்படும் நன்மைகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்களும் பள்ளி பாட நூல்களின் பின்புற அட்டைகளில் அச்சிட்டு பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு  அமைப்பினரிடையே பாராட்டும் வரவேற்பும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com