தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தில் அரசு கவனம் செலுத்தவில்லை: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தாத காரணத்தால் காவிரி நீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது என்று

தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தாத காரணத்தால் காவிரி நீர் கடலில் கலந்து வீணாகி உள்ளது என்று தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ்  தெரிவித்தார்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணியிடம் கேள்வி கேளுங்கள் என்ற நிகழ்ச்சி சேலம் இரும்பாலை பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் எம்.பி.-யிடம் கேள்விகளைக் கேட்டனர்.
முன்னதாக, நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ்  பேசியது:
தமிழகம் மட்டுமல்ல, உலகளவில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.  இளைஞர்களால் இந்த மாற்றங்கள் வருகின்றன.  எனவே, இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் நல்ல தலைவர்கள் உருவாகிட முடியும்.  கால நிலை மாற்றம் பெரிய சவாலாக இருக்கிறது.  இதனால் வறட்சி,  சூறாவளி பாதிப்பு ஏற்படுகிறது. 
மரங்களை வளர்ப்பதன் மூலம் மட்டுமே கரியமல வாயுவைக் கட்டுப்படுத்திட முடியும்.  மரங்கள் இல்லாத நிலையில், கரியமல வாயு கடலில் கலந்து அழுத்தம் அதிகமாகி மழை,  வறட்சி ஆகியவை உருவாகின்றன.
தமிழகத்தில் 564 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.  இது இந்திய அளவில் 40 சதவீத அளவாகும்.  ஒவ்வோர் ஆண்டும் பொறியியல் படிப்புகளில் 2 லட்சம் பேரும்,  இதர கலை அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்து மொத்தம் 8 லட்சம் பட்டதாரிகள் வெளியேறுகின்றனர்.  இதில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மீதி இருப்பவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.  அரசும் வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.  நல்ல திட்டமிடல் இருந்தால் 1 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
     தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரி 950 மி.மீ. மழை பெய்கிறது.  மழை போதிய அளவுக்கு இருக்கிறது.  ஆனால்,  மழை நீரைச் சேமிக்கும் நீர் நிலைகள் இல்லை.தென்னிந்தியாவைப் பொருத்தவரையில் ஆண்டுக்கு சராசரியாக மாநில வாரியாக தமிழகத்தில் 950 மி.மீ. மழையும், கர்நாடகத்தில் கூர்க் பகுதியில் மட்டும் 3,000 மி.மீ. மழையும், கர்நாடக மாநிலத்தில் 750 மி.மீ. மழையும், ஆந்திரத்தில் 850 மி.மீ. மழையும் பெய்கிறது. தமிழகத்தில் பெய்யும் மழையில் சுமார் 170 டி.எம்.சி. அளவுக்கு மட்டுமே நீரை தேக்கி வைத்திட முடியும்.
ஆனால், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நீர் மேலாண்மைத்  திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கியதன் மூலம் அங்கு மழை நீர் அதிகளவில் சேகரிக்கப்படுகிறது. இதில் கர்நாடகத்தில் 350 டி.எம்.சி.யும், ஆந்திரத்தில் 550 டி.எம்.சி.யும் தேக்கி வைக்கப்படுகிறது.  ஆனால். தமிழகத்தில் நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு அரசு போதிய நிதி ஒதுக்கி திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. 
இதனால் அண்மையில் பெய்த மழையில் மேட்டூர் அணையில் இருந்தும், அமராவதி மற்றும் பவானி சாகர் அணைகளில் இருந்து சுமார் 173 டி.எம்.சி. நீர் வீணாக கடலில் கலந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரில் 5 டி.எம்.சி. அளவுக்கு தேக்கி வைத்தால்,  சேலம் மாவட்ட மக்களுக்கு தேவையான ஓராண்டு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். டாஸ்மாக் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.36,000 கோடி வருவாய் கிடைக்கிறது.  வரியினங்கள் மூலம் ரூ.1.12 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது. 
இதில் மூன்றில் ஒரு பங்கு வருவாய்  டாஸ்மாக் விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது இல்லாத தமிழகத்தை உருவாக்கிடுவோம்.  இலவச திட்டங்களை ஒழித்து மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவோம். இளைஞர்களின் போராட்டத்தால் 6 நாடுகளில் அதிபர் உள்ளிட்டோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இளைஞர் சக்தி என்பது சாதாரணமானது அல்ல.  இங்குள்ள இளைஞர்கள் விவசாயிகள் உள்ளிட்டோருக்காகப் போராட வேண்டும்.  தமிழகம் பல்வேறு துறைகளில் முன்னணியில் இருந்தது.  தற்போது அந்த நிலை மாறிவிட்டது என்றார் அன்புமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com