பணத்துக்காக 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விடவேண்டாம்: கமல்ஹாசன்

தேர்தல் காலத்தில் பணத்துக்காக வாக்களித்து உங்களின் 5 ஆண்டு கால வாழ்க்கையை குத்தகைக்கு விட வேண்டாம் என

தேர்தல் காலத்தில் பணத்துக்காக வாக்களித்து உங்களின் 5 ஆண்டு கால வாழ்க்கையை குத்தகைக்கு விட வேண்டாம் என மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மேட்டூர் சதுரங்காடியில் மக்கள் மத்தியில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:
பல ஊர்களிலும் மக்களைச் சந்தித்து வந்துகொண்டிருக்கிறேன். அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறேன். அரசு அதிகாரிகள் கூட அவர்களின் குறைகளை எங்கள் அளவுக்குக் கேட்டதில்லை.
மேட்டூர் அணை நிரம்பி இருந்தாலும் மேட்டூர் பகுதியில் மூன்று நாள்களுக்கு  ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருகிறது. புதைச் சாக்கடைத் திட்டம் முழுமை அடையாத காரணத்தால் குடிநீர் விநியோகம் சீராக்க முடியவில்லை. மக்களின் குறைகளைப் போக்க வேண்டியவர்கள் மக்களின்  அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய தவறிவிட்டனர்.
இதற்கு மேலும் அவர்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் சினிமாகாரனாக இங்கு வரவில்லை. உங்களுக்கு வேலை செய்ய வந்துள்ளேன்.
இந்த மாற்றத்துக்கான புரட்சியில் நீங்கள் சேரவேண்டும். நீங்கள் இல்லாவிட்டால் மாற்றம் சாத்தியமாகாது. ஓட்டுக்காக ரூ. 5 ஆயிரம் ரூ. 10 ஆயிரம் பெற்றுக் கொண்டு உங்களின் 5 ஆண்டு வாழ்க்கையை குத்தகைக்கு விட வேண்டாம். தப்பான இந்த வியாபாரத்தில் ஏமாறாதீர்கள். கொஞ்சம் பொறுமையாக காத்திருந்தால் அவர்கள் தரும் பணத்தைவிட அதிகமாக நீங்களே சம்பாதிக்கலாம் என்றார்.
ஓமலூரில்....
ஓமலூர் பேருந்து நிலையம் எதிரே மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: 
மின்தடை தற்போது அதிகமாக ஏற்பட்டு வருகிறது. மின்தடையால் கிராம மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றும். இளைஞர்கள் மக்கள் நீதி மய்யத்தை நோக்கி வாருங்கள் என்றார்.
ஆத்தூரில்...
ஆத்தூரில் மக்கள் நீதிமய்யத் தலைவர் கமல்ஹாசன் சனிக்கிழமை பொதுமக்களிடம் உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்றார். 
இராணிப்பேட்டையில் கமல்ஹாசன் மேலும்  பேசியதாவது:
நீங்கள் ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும். உங்களது பொன்னான வாக்குகளை எனக்கு அளித்தால் கண்டிப்பாக அனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்றார்.
முன்னதாக நடிகை ஸ்ரீ ப்ரியா, பாடலாசிரியர் சினேகன், மாநில நிர்வாகிகள் சுப்பையா, மாவட்டச் செயலாளர் சி. கோபால், சி. சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தம்மம்பட்டியில்...
தம்மம்பட்டி அருகே கெங்கவல்லியில் அவர் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் சனிக்கிழமை பேசியதாவது:
தமிழகத்தை புதிய பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும். அதற்கான கடமை நம் எல்லோருக்கும் இருக்கிறது. அதை நானும் நீங்களும் சேர்ந்து செய்ய வேண்டும். காசுக்காக ஓட்டுபோடாதீர்கள்.
மக்கள் கவனமாக இருந்தால் தமிழகத்துக்கு நல்ல தலைமை கிடைக்கும். உங்களது கோரிக்கைகளை ஆட்சிக்கு வருமுன்னரே மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளிடம் சொல்லுங்கள். அவர்கள் தங்களால் இயன்றதை செய்வார்கள் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com