வாழப்பாடியில் குடிநீர் வழங்கக் கோரி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

வாழப்பாடியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் திரண்டு சென்ற பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 

வாழப்பாடியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் திரண்டு சென்ற பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
வாழப்பாடி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளிலும் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அனைத்து குடியிருப்புகளுக்கும் மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் காவிரி நீர் குடிநீராக விநியோகிக்கப்படுகிறது. மாதாந்திர பராமரிப்புப் பணி, மின்தடை,  குடிநீர் குழாயில் உடைப்பு போன்ற பல்வேறு காரணங்களினால், வாழப்பாடியில் மாதம் மூன்றுமுறை குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு வழியின்றி பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்நிலையில், வாழப்பாடி 13-ஆவது வார்டு பகுதிக்கு 15 நாள்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்காத நிலையில், வெள்ளிக்கிழமை காலை குறைந்த அளவில் குடிநீர் வழங்கியுள்ளனர். போதிய குடிநீர் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், காலி குடங்களுடன் திரண்டு சென்று, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து, மீண்டும் கூடுதலாக குடிநீர் விநியோகித்ததோடு, வருங்காலங்களில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால், போராட்டத்தைக் கைவிட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
வாழப்பாடி  பேரூராட்சியில் இரு தினங்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com