பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ், திமுகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, சேலத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய பாஜக அரசைக் கண்டித்து, சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏ வழக்குரைஞர் ஆர்.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஜெயசந்திரன், காஜா மொய்தீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது.
 சமையல் எரிவாயு உருளை மற்றும் மண் அடுப்புடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், இருசக்கர வாகனத்தை சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி ஊர்வலமாக பிச்சை எடுத்துக் கொண்டே வந்தனர். ஏராளமான மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 வாழப்பாடியில்...
 வாழப்பாடியில் பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ஆ. ராஜா தலைமை வகித்தார். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன் ராம சுகந்தன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழ்ச்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, வாழப்பாடி ஒன்றிய செயலாளர் எஸ்.சி. சக்கரவர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் மற்றும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
 ஓமலூரில்...
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஓமலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
 சேலம் மேற்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் குப்புசாமி, செல்வகுமரன், ராஜ அய்யப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பார்த்திபன்,ஆறுமுகம்,சாமுராய் குரு உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாகக் குறைந்துள்ள நிலையிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மத்திய அரசும், மாநில அரசும் சாமானிய மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன.பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வதால் காய்கறிகள், அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் தொடர்ந்து மக்களின் வருவாயை சுரண்டி வருகின்றன.
 இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும். அதனால், மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அனைத்துக் கட்சியினரும் ஓமலூர் நகர் முழுக்க கண்டனப் பேரணி நடத்தினர். பாரத் பந்த்தை முன்னிட்டு ஓமலூர் வட்டாரத்தில் 50 சதவீதக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
 மேட்டூரில்...
 நங்கவள்ளி வட்டார காங்கிரஸ் சார்பில் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
 இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நங்கவள்ளி வட்டார காங்கிரஸ் தலைவர் கே.வி.அய்யண்ணன் தலைமை வகித்தார். நங்கவள்ளி ஒன்றிய தி.மு.க செயலாளர் கே.எம்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கூளையூர் சேகர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
 மேட்டூர் ஒர்க்ஷாப் கார்னரில் நடபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் ஏ.எஸ்.வெங்கேஸ்வரன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட நிர்வாகி மெய்யழகன், சிவக்குôர், நகர செயலாளர் அப்துல்கபூர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மோட்டார் சைக்கிளை ஸ்டெக்சரில் வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
 ஆத்தூரில்
 பெட்ரோல், டீசல் விலையுர்வைக் கண்டித்து, ஆத்தூரில் காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். இதற்கு காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் ஏ.ஆர்.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தார்.
 நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.
 எடப்பாடியில்...
 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, எடப்பாடியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதனால் எடப்பாடியில் இருந்து அதிகாலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை. மாலை 6 மணி முதல் அனைத்துப் பேருந்துகளும் இயங்கத் தொடங்கின. அதிகாலை நகரப் பேருந்துகள் இயங்காத நிலையில் எடப்பாடி உழவர் சந்தைக்கு காய்கறி வரத்து குறைவாகக் காணப்பட்டது. அதேபோல, உழவர் சந்தையில் நுகர்வோர் எண்ணிக்கையும் குறைந்திருந்தது.
 பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் வழக்கம்போல் இயங்கின. நகரின்
 அனைத்துப் பகுதியிலும் உள்ள மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
 ஏற்காட்டில்...
 ஏற்காட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
 இதனால் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பேருந்துகள்,இருசக்கர வாகனங்கள் வேன்,ஆட்டோ வழக்கம் போல் இயங்கின. வங்கிகள், பள்ளிக் கூடங்கள் வழக்கம் போல் இயங்கின. மலைக் கிராமங்களிலிருந்து பொதுமக்கள் ஏற்காடு பகுதிகளுக்கு வந்த போதிலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகக் காண முடிந்தது. படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.
 சங்ககிரியில்...
 பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கண்டித்து சங்ககிரியில் அனைத்துக் கடைகளும் திங்கள்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.
 சங்ககிரி நகர், பழைய, புதிய எடப்பாடி சாலைகள், வி.என், பாளையம், பழைய, புதிய பேருந்து நிலைய வளாகங்களில் தேநீர், மளிகை கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் உணவு விடுதிகள் உள்ளிட்டவை முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தன. அரசு, தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பேருந்துகள் இயக்கப்பட்டதால், தனியார், அரசுப் பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு சென்றுதிரும்பினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com