புதிய தொழில்நுட்பம், நீர் மேலாண்மையில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும்: ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உழவர் மன்ற

சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புத்திரகவுண்டன்பாளையத்தில் உழவர் மன்ற கூட்டமைப்பின் வாயிலாக, நேரடி காய்கறி கொள்முதல் மையத்தை தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ்,  "புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மையில் விவசாயிகள் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். 
புத்திரகவுண்டன்பாளையத்தில், சேலம் மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பு,  திருவள்ளுவர் மற்றும் வசிஷ்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில், நேரடி காய்கறி கொள்முதல் மையத்தை, மாவட்ட ஆட்சியர்  ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை தொடக்கி வைத்து விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். 
அப்போது ஆட்சியர் பேசுகையில்,  "உழவர் மன்ற கூட்டமைப்பின் அலுவலகம் பொதுத்துறை நிறுவனத்தை போல அமைக்கப்பட்டுள்ளது.  உற்பத்தியாளர்களான விவசாயிகளிடமிருந்து நேரடியாக காய்கறிகளை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் முயற்சி வரவேற்கத்தக்கது. தண்ணீரை குறைவாகப் பயன்படுத்தி சாகுபடி செய்யும் நீர் மேலாண்மை முறைகள் மற்றும் புதிய தொழில்நுட்ப முறைகளிலும் விவசாயிகள் கவனம் செலுத்தி பயன்பெற வேண்டும். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளது 
என்றார்.
நேரடி காய்கறி கொள்முதல் மையம் குறித்து சேலம் மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்புத் தலைவர் ஜெயராமன், செயலர் தும்பல் பாஸ்கரன் ஆகியோர் கூறியது: 
சேலம் மாவட்டத்தில் முதல் முறையாக வெஜ்ஜஸ் எனும் மொபைல் ஆப் மூலம் ஆர்டர்கள் பெறப்பட்டு, வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் நேரிடையாக வழங்கப்படவுள்ளன.  அதற்காக, பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை பகுதி விவசாயிகளிடமிருந்து,  தினசரி 2 டன் வரை காய்கறிகளை கொள்முதல் செய்து, சேலத்துக்கு அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தரமான காய்கறிகள், உழவர் சந்தை விலையிலேயே நேரடியாகக் கிடைக்கும். விவசாயிகளுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றனர்.
இந்த விழாவில், ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் பிரகாசம்,  நபார்டு வங்கி பொது மேலாளர் பாமா புவனேஸ்வரி மற்றும் விவசாயிகள் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். காய்கறி கொள்முதல் மையத்தில், வங்கிகளின் செயல்பாடுகள், இப்கோ நிறுவன உயிர் உரங்கள் குறித்த அறிமுகம்,  சிறுதானிய பொருள்கள், உழவர் மன்றங்களின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக, 10-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com