ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை தேவை: கே.வீ.தங்கபாலு

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து நடவடிக்கை தேவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.

ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து நடவடிக்கை தேவை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.
ரஃபேல் போர் விமானம் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக மத்திய அரசைக் கண்டித்து,  சேலம் ஆனந்தா பாலம் அருகே காமராஜர் சிலை பகுதியில் இருந்து  காங்கிரஸார் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.  அக்ரஹாரம், தபால் நிலையம்,  வள்ளுவர் சிலை வழியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பேரணி நிறைவு பெற்றது. ஆட்சியர் அலுவலகம் முன் கூடிய காங்கிரஸார்  மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
இதையடுத்து,  கே.வீ.தங்கபாலு செய்தியாளர்களிடம் கூறியது: 
காங்கிரஸ் ஆட்சியின்போது,  ரஃபேல் போர் விமானம்  வாங்குவதற்கு ஒரு விமானம் ரூ.526  கோடிக்கு என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது.  ஆனால், பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் ஒரு விமானத்தை ரூ.1,670 கோடிக்கு வாங்கிட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
போர் விமானங்களைத் தயாரிப்பதற்கு உண்டான விதிமுறைகளைப் புறந்தள்ளி இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை விட்டுவிட்டு, பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொள்ளாமல் அண்மையில் தொடங்கிய அம்பானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். 
இதன்மூலம் ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது.  இது குறித்து குடியரசுத் தலைவரிடம் கொடுக்கப்படும் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்,  இந்தப் பிரச்னையை மக்கள் மன்றத்துக்குக் கொண்டு செல்வோம் என்றார்.
பேரணியில் தொழில் வல்லுநர் பிரிவு மாநிலத் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம், கட்சியின் மாவட்டத் தலைவர்கள் ஜெயபிரகாஷ்,  அர்த்தனாரி,  முருகன்,  முன்னாள் எம்.பி. தேவதாஸ்,  மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயரத்தினம்,  கருப்பூர் முருகேசன், ஜெயராமன், மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் கமலக்கண்ணன்,  மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாபுலால், மாநிலச் செயலர் கார்த்திக் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com