போஸ் மைதான தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கம்
By DIN | Published On : 01st April 2019 10:15 AM | Last Updated : 01st April 2019 10:15 AM | அ+அ அ- |

சேலம் பழைய பேருந்து நிலையம் ரூ. 92 கோடியில் கட்டப்படுவதைத் தொடர்ந்து, போஸ் மைதானத்தில் கட்டப்பட்ட தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் ரூ. 92 கோடி செலவில் ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வாழப்பாடி, அயோத்திப்பட்டணம், ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் அருகே உள்ள போஸ் மைதானத்தில் இருந்து இயக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக அருகில் உள்ள போஸ் மைதானத்தில் ரூ. 3 கோடி செலவில் தற்காலிகப் பேருந்து நிலையம் ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. நவீன முறையில் தரைதளம், உயர்கோபுர மின்விளக்குகள், கழிவறைகள், பயணிகள் வசதிக்காக நிழற்கூடங்கள் ஆகியவை புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.
இதில் தற்போதைய பழைய பேருந்து இருக்கும் மளிகை கடைகள் அனைத்தும், தற்காலிக பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சி சார்பில் 70 தற்காலிக கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தற்காலிக பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்து நகரப் பேருந்துகள் அனைத்தும் போஸ் மைதானத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.