சுயேச்சை எம்.பி.க்கள்தான் பிரதமரை தீர்மானிக்கும் சூழல் உருவாகும்: டி.டி.வி. தினகரன்
By DIN | Published On : 01st April 2019 10:16 AM | Last Updated : 01st April 2019 10:16 AM | அ+அ அ- |

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறப் போகும் சுயேச்சை எம்.பி.க்கள்தான் பிரதமரை தீர்மானிக்கும் சூழல் உருவாகும் என அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அமமுக வேட்பாளர் கோமுகி மணியனை ஆதரித்து, சேலம் அயோத்தியாப்பட்டணம் ராமர் கோயில் பகுதியில் டி.டி.வி.தினகரன் பேசியது:-
மக்களவைத் தேர்தல் வரும் வரை தமிழகத்தைக் கண்டு கொள்ளாமல் இருந்த பிரதமர் நரேந்திர மோடி இப்போது பலமுறை வந்து செல்கிறார். அதனால்தான் கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடியா, லேடியா என மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டக் கூடாது என்று கூறியவர்களோடு, அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். ஜெயலலிதாவுக்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் செய்யும் அளவுக்கு அதிமுக அரசு சென்றுள்ளது.
தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறவும் தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் வளர்ச்சியைக் காணவும் வாக்காளர்கள் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.
இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு நலத் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தருவோம். பின்தங்கிய பழங்குடியின மக்களுக்கு வனத் துறை விதித்துள்ள நிலத் தடையை நீக்கவும் கல்வராயன் மலை சுற்றுலாத் தலமாக மாற்றவும் ஆதரவு தர வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, சீலநாயக்கன்பட்டி மாரியம்மன் கோயில் திடல் பகுதியில் சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் எஸ்.கே. செல்வத்தை ஆதரித்து, டி.டி.வி. தினகரன் பேசியது:
மக்களவைத் தேர்தலில் அ.ம.மு.க. வெற்றி பெற்று சுயேச்சை எம்.பி.க்களே பிரதமரை தீர்மானிக்கக் கூடிய சூழ்நிலை கட்டாயம் உருவாகும். அதிமுக அரசு நீடிப்பதற்கு அவருக்கு 8 எம்எல்ஏக்கள் தேவைப்படுகின்றனர். ஆனாலும் நடைபெற உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. மக்கள் எந்தவொரு சூழ்நிலையிலும் இவர்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அ.ம.மு.க.வின் அனைத்து வேட்பாளர்களும் இடைத் தேர்தலிலும், மக்களவைத் தேர்தலிலும் அமோக வெற்றி பெறுவார்கள் என்றார் தினகரன்.