நாமமலையில் பாலம் அமைத்துத் தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிப்போம்: பொதுமக்கள் போராட்டம்

சேலத்தில் பாலம் அமைத்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் பாலம் அமைத்து தராவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாநகராட்சி 37-ஆவது கோட்டத்துக்குள்பட்ட நாமமலை நெசவாளர் காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு  வருபவர்களே அதிகளவு வசித்து வருகின்றனர்.  இப் பகுதி மக்கள் சேலம் மாநகருக்கு வர வேண்டும் என்றால்,  தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துதான் வர வேண்டிய நிலை உள்ளது. 
அதேபோல்,  எதிர்புறத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள்,  நியாய விலைக் கடைக்காக,  தேசிய நெடுஞ்சாலையைக் கடந்துதான் நாமமலை நெசவாளர் காலனிக்கு வர வேண்டியுள்ளது.
    நெடுஞ்சாலையைக் கடக்கும் போது,  அடிக்கடி விபத்து ஏற்பட்டு, உயிர் பலி ஏற்படுகிறது.  எனவே,  இந்தப் பகுதியில் பாலம் அமைத்து தர வேண்டியும், தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திட தடுப்பு வேலிகளை அமைத்து தரக் கோரியும் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏற்பட்ட விபத்துகளில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த அப் பகுதி மக்கள் தங்களது குழந்தைகளுடன் கருப்புக் கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்ற படி சுமார் 500 -க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும், பாலம் அமைத்துத் தரக் கோரி முழக்கங்கள் எழுப்பினர். 
நிகழ்விடத்துக்கு வந்த போலீஸார்,  பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர். அதற்கு உடன்படாத மக்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொது மக்கள் கூறியது:
இந்தப் பகுதியில் பள்ளி குழந்தைகள் உள்பட பலரும் விபத்தில் சிக்குகின்றனர். 
இதைத் தடுக்க உரிய நடவடிக்கை  எடுக்காவிட்டால் வரும் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com