சேலத்தில் மூவர் தற்கொலை வழக்கில் பணத்தை தராமல் ஏமாற்றிய பெண் கைது
By DIN | Published On : 04th April 2019 10:10 AM | Last Updated : 04th April 2019 10:10 AM | அ+அ அ- |

சேலத்தில் மூன்று பேர் விஷமருந்தி தற்கொலை செய்த வழக்கில், கடன் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் குகை பகுதியைச் சேர்ந்த சிவராமன், ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை, தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்மினி, அவரது சகோதரர் நாக சண்முகத்துக்கு கடன் கொடுத்திருந்தாராம்.
இந்தப் பணத்தை திருப்பித் தராததால் மனமுடைந்த சிவராமன், தனது மனைவி புஷ்பா மற்றும் மகன் பாபு ஆகியோருடன் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் சிவராமன் இரண்டு கடிதங்களை எழுதி வைத்திருந்தாராம். அந்த கடிதத்தில், தான் சேர்த்த பணத்தை வைத்து வயதான காலத்தில் பார்வையற்ற மகனுடன் வாழ்ந்து விடலாம் என்று நினைத்து கையில் இருந்த ரூ.4 லட்சத்து 75 ஆயிரத்தை கடன் கொடுத்தேன். ஆனால், சிறிது காலம் வட்டி கொடுத்து விட்டு பிறகு ஏமாற்றத் தொடங்கினர். பணம் கேட்கச் சென்ற போது என்னை மிரட்டினர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டித் தொகையை நம்பித் தான் நாங்கள் வாழ்ந்து வந்தோம். செலவுக்குக் கூட பணமில்லாததால், நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கடிதத்தில் சிவராமன் எழுதியிருந்தார். இது தவிர, மற்றொரு கடிதத்தை அவரது மகன் விக்னேஷுக்கு எழுதியுள்ளார். இந்த இரண்டு கடிதங்களையும் செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதனிடையே, பணத்தை திருப்பித் தராத சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த பத்மினி, அவரது சகோதரர் நாக சண்முகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் பத்மினியைக் கைது செய்தனர். பின்னர் பத்மினி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவான நாக சண்முகத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.