தீவட்டிப்பட்டி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

ஓமலூர் அருகே ஜோடுகுளி, சரக்கபிள்ளையூர் ஆகிய கிராமங்களில் குடிநீர் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட

ஓமலூர் அருகே ஜோடுகுளி, சரக்கபிள்ளையூர் ஆகிய கிராமங்களில் குடிநீர் கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஜோடுகுளி, ஓமலூர் ஒன்றியத்தில் உள்ள சரக்கபிள்ளையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன.
இந்த இரண்டு கிராமத்திலும் சுமார் ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆங்காங்கே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டன.
ஆனால், இந்தத் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை பயன்படுத்தப்படாமல் பழுதடைந்துள்ளது. மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்படுத்தாத நிலையில் கிராமங்களுக்கு தனியாக பைப் லைன் அமைத்து காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், அந்தப் பகுதிகளுக்கு தண்ணீர் வரும் குழாய் பழுதடைந்து விட்டது. அதனால், பழுதை சரி செய்து குடிநீர் வழங்குமாறு அப்பகுதி பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர், காடையாம்பட்டி மற்றும் ஓமலூர் ஒன்றிய அதிகாரிகள், கிராம ஊராட்சிச் செயலாளர் உட்பட அனைவரிடமும் புகார் மனுக்களை கொடுத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அந்தப் பகுதிக்கு தண்ணீர் விநியோகம் செய்வதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் இல்லாமல், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அலட்சியபடுத்திய நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், ஓமலூர் தின்னபட்டி சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தண்ணீர் வழங்காவிட்டால் மறியலை கைவிடமாட்டோம் என்றும் பெண்கள் கூறினர்.
தகவலறிந்து அங்கே வந்த ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீஸார் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்களும் பெண்களும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் தற்போது கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு வருகிறது. இதை சமாளிக்க கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com