வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம், அம்மாப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் அனுப்பப்பட்டன. இந்தப் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணி ராம்தாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 3,288 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 243 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 243 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1,353 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்குப் பதிவு முழுவதும் இணையதளம் வாயிலாக நேரலையில் கண்காணிக்கப்படும். மாவட்டம் முழுவதும் மண்டல அலுவலர்கள், வாக்குச் சாவடி முதன்மை அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் 1, 2, 3 ஆகிய நிலைகளில் பணிபுரிய 15,784 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேவையை விட கூடுதலாக 25 சதவீதம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28,94,597 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சேலம் மக்களவைத் தொகுதியில் 15,92,487 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கென 593 மையங்களில், 1,803 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 172 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 172 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 779 மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்தல் பணிகளில் 8,656 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். வாக்குப் பதிவுக்காக 2,228 கட்டுப்பாட்டுக் கருவிகள், 4,242 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,390 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் 46 மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களுக்கு வாக்குப் பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன  என்றார் அவர்.
ஆத்தூரில்...
ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட ஆத்தூர் மற்றும் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்து வாக்குச் சாவடிகளுக்கும் அதற்கான ஆவணங்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் என தனித்தனியாக வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
சங்ககிரியில்...
நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சங்ககிரி சட்டப்பேரவையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து புதன்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. 
உதவி தேர்தல் அலுவலர் மு.அமிர்தலிங்கம் மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட அறை திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் 311 வாக்குச் சாவடிகளுக்கு  வாக்குப்பதிவு இயந்திரங்கள்,  ஒப்புகைச் சீட்டு கருவிகள், வாக்காளர் பட்டியல், வாக்காளருக்கு வைக்கப்படும் மை உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 311 வாக்குச் சாவடிகளில் 1,244 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், 26 மண்டல அலுவலர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் ஒரு டிஎஸ்பி, 3 காவல் ஆய்வாளர்கள், 11 உதவி காவல் ஆய்வாளர்கள், 311 காவலர்கள், 36 துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com