மது அருந்தி வாகனம் ஓட்டுவதே விபத்துக்கு முக்கிய காரணம்
By DIN | Published On : 26th April 2019 02:57 AM | Last Updated : 26th April 2019 02:57 AM | அ+அ அ- |

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதே விபத்துகள் அதிகரிக்க முக்கிய காரணம் என ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் காவல் துறையினர் தெரிவித்தனர்.
ஓமலூர் காவல்துறை சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சாலையில் வாகனங்களை இயக்கும்போது விபத்தில்லாமல் இயக்கம் வழிமுறைகள் குறித்தும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
ஓமலூர் நகர அனைத்து வாகன ஓட்டிகள், ஆட்டோ, மற்றும் சொகுசு வாகன ஓட்டிகளும் கலந்துகொண்டனர். இதில், ஓமலூர் காவல் ஆய்வாளர் சக்ரபாணி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்துப் பேசினர்.
அவர்கள் பேசியதாவது: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாததும், அலட்சியமுமே விபத்து அதிகரிக்க காரணம். மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே சாலை விபத்துகள் மிக அதிகமாக நடைபெறுகின்றன.
சாலையில் வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசுதல், தலைக்கவசம் இல்லாமல் செல்லுதல், கார்களில் சீட் பெல்ட் போடாமல் அலட்சியமாக இருத்தல், அதிவேகமாக இயக்குதல், சரக்கு வாகனங்களில் ஆள்களை ஏற்றிச் செல்லுதல் ஆகியவற்றால் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன என்றனர்.
இதையடுத்து விபத்து ஏற்பட்டால் அங்கே செய்ய வேண்டிய மீட்புப் பணிகள், விபத்தில் காயம்பட்டவர்களை மீட்பதில் உள்ள வழிமுறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.