வங்கி ஊழியரைக் கொன்ற வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 26th April 2019 02:55 AM | Last Updated : 26th April 2019 02:55 AM | அ+அ அ- |

சேலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் வங்கி ஊழியரை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் குகை மீனாட்சிபுரம் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் பணியாற்றி வந்தார். இவருக்கும் கிச்சிபாளையம் எஸ்.எம்.சி. காலனியைச் சேர்ந்த குப்புராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
இதனிடையே கடந்த 2017 மே 30- ஆம் தேதி சீனிவாசன் தனது உறவினரான ரஞ்சித்குமார் மற்றும் அவரது நண்பருடன் ஆற்றோரம் மூங்கப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறம் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குப்புராஜ் மற்றும் அவரது நண்பர்கள் கோட்டையைச் சேர்ந்த தஸ்தகீர் மற்றும் ஊமையன் என்ற ஷாகின்ஷா ஆகியோர் சீனிவாசனுடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது குப்புராஜ், தஸ்தகீர், ஊமையன் ஆகியோர் கத்தியால் குத்தியும், இரும்புக்கம்பியால் தாக்கியும் சீனிவாசனை கொலை செய்தனர். இதுதொடர்பாக ரஞ்சித்குமார், செவ்வாய்பேட்டை போலீஸில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் குப்புராஜ், தஸ்தகீர், ஷாகின்ஷா ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இதனிடையே இந்த வழக்கில் குப்புராஜ், தஸ்தகீர் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.