1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு கண்டெடுப்பு
By DIN | Published On : 29th April 2019 09:31 AM | Last Updated : 29th April 2019 09:31 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், பொட்டனேரி கிராமத்தில் 1,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மையக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுத்தனர்.
மேச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் கோ.பெ. நாராயணசாமி, வரலாற்று ஆர்வலர் அன்புமணி ஆகியோர் அளித்த தகவலின்பேரில், தமிழக தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் சு. இராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த விழுப்புரம் வீரராகவன், ஆறகளூர் பொன். வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் மேட்டூர் வட்டம், மேச்சேரி அருகே பொட்டனேரி கிராமத்தில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கல்வெட்டின் உயரம் 70 செ.மீ., அகலம் 65 செ.மீ. தடிமண் 10 செ.மீ. ஆகும். இதன் மேல்பகுதி உடைந்துள்ளது. உடைந்த மேல்பகுதி அங்கு காணப்படவில்லை. எட்டு வரிகளில் வட்டெழுத்துடன் கல்வெட்டுள்ளது.
இதன் காலம் 8-ஆம் நூற்றாண்டாகக் கருதலாம். எழுத்தமைவானது 1,200 ஆண்டுளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்து காணப்படுகிறது. கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும், பின் வட்டெழுத்திலும், 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால், நிலம் யாருக்கு, எதற்காகக் கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை.
வாணர்கள் யார்?
வாணன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சங்கக் காலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தருமபுரி கிருஷ்ணகிரி, செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்துள்ளன.
12-ஆம் நூற்றாண்டில் இவர்கள், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகளூரைத் தலைநகராக கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்.
தற்போது கண்டறியப்பட்ட இக் கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை சேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8-ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
பராமரிப்பின்றி சமணர் சிலை...
பொட்டனேரி வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளை நிலத்தில் ஒரு சமண தீர்த்தங்கரரின் சிலை பராமரிப்பின்றி காணப்படுகிறது.
பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது.
அதுபோல, பொட்டனேரியில் உள்ள தீர்த்தங்கரர் சிலையையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சேலம் வரலாற்று ஆய்வு மையதைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.