முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு தினம்: தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை
By DIN | Published On : 04th August 2019 05:03 AM | Last Updated : 04th August 2019 05:03 AM | அ+அ அ- |

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரத்தில் தீரன் சின்னமலை உருவப் படத்துக்கும், அவரது நினைவு சின்னத்திலும் தமிழக அரசு சார்பில் அமைச்சர், மாநிலங்களவை, மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள் சனிக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் சூழ்ச்சி செய்து சிறைபிடிக்கப்பட்டு, ஆடி 18-ஆம் தேதி சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
ஒவ்வோர் ஆண்டும் அவர் தூக்கிலிடப்பட்ட நினைவு தினத்தில், அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு சங்ககிரி மலைக் கோட்டையின் அடிவாரத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு அரசு சார்பில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். இதேபோல் ஈரோடு-பவானி பிரிவு சாலையில் கட்டப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு சின்னத்திலும் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், மாநிலங்களவை உறுப்பினர் என். சந்திரசேகரன், சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். திவாகர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ். தீபா கனிகர், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கர், வெற்றிவேல், எஸ். ராஜா, மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலர் மு. அண்ணாதுரை, சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம், வட்டாட்சியர் கே. அருள்குமார், சங்ககிரி அதிமுக ஒன்றியச் செயலர் ரத்தினம், நகரச் செயலர் ஆர். செல்லப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். அசோக்குமார் தலைமையில் மூன்று டி.எஸ்.பி.க்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸார் சங்ககிரி நகரப் பகுதி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.