முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலத்தில் இன்று அரசுப் பொருள்காட்சி தொடக்க விழா: முதல்வர் பங்கேற்பு
By DIN | Published On : 04th August 2019 05:03 AM | Last Updated : 04th August 2019 05:03 AM | அ+அ அ- |

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சேலம் அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருள்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்துவது வழக்கம்.
தற்போது சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பேருந்து நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், நிகழாண்டில் புதிய பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி மைதானத்தில் அரசுப் பொருள்காட்சி நடத்தப்படுகிறது.
சேலம் அரசு பொருள்காட்சி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, அரசுப் பொருள்காட்சியைத் தொடக்கி வைத்து, நலத் ட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமை வகிக்கிறார்.
செய்தி, மக்கள் தொடர்பு துறை இயக்குநர் பொ. சங்கர் வரவேற்கிறார். ஆட்சியர் சி.அ. ராமன் நன்றி கூறுகிறார்.
சேலம் அரசுப் பொருள்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து அங்கிருந்து கார் மூலம் சனிக்கிழமை இரவு சேலம் வந்தார்.
அவருக்கு அதிமுகவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை எடப்பாடி செல்வார் எனவும், கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவார் எனவும் தெரிகிறது.
பின்னர் மாலை சேலம் திரும்பும் முதல்வர், அரசுப் பொருள்காட்சியைத் தொடக்கி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். பின்னர், திங்கள்கிழமை மாலை கார் மூலம் கோவை சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.