ஆடிப் பெருக்கு: மேட்டூர் காவிரியில் 30 ஆயிரம் பேர் நீராடினர்

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டம், மேட்டூரில் 30 ஆயிரம் பேர் திரண்டனர்.


ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, சேலம் மாவட்டம், மேட்டூரில் 30 ஆயிரம் பேர் திரண்டனர்.
ஆடிப்பெருக்கு நாளான சனிக்கிழமை மேட்டூர் காவிரியில் நீராட சேலம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் மேட்டூர் காவிரியில் நீராட பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும், பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்களிலும் குடும்பம் குடும்பமாக வந்தனர்.
மேட்டூரில் புதுப்பாலம், காவிரிப் பாலம், அணைக்கட்டு முனியப்பன் கோயில் பகுதியில் மக்கள் நீராடினர். மேட்டூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் செளந்திரராஜன் தலைமையில் மூன்று காவல் ஆய்வாளர்கள், 350 போலீஸார், ஊர்க் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் குளிக்கும் படித் துறைகளில் பெண்களுக்கு உடை மாற்றும் அறைகள், கழிவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அணைக்கட்டு முனியப்பன் கோயிலில் நெரிசலைத் தவிர்க்க தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 
பொதுமக்கள் தங்கள் வேண்டுதலுக்காக ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்தனர்.  தீயணைப்புப் படையினர் பக்தர்கள் நீராடும் பகுதியில் ரப்பர் படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
கிராம மக்கள் தங்கள் குலத் தெய்வங்களின் உருவச் சிலைகளையும்,  ஆயுதங்களையும் பல கி. மீ. தொலைவு தலைசுமையாகச் சுமந்து வந்து காவிரியில் நீராட்டி எடுத்துச் சென்றனர்.
சேலம், தருமபுரி, ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், மேட்டூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
கோட்டையூர், பண்ணவாடி, கூணான்டியூர் காவிரி கரைகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நீராடிச் சென்றனர்.  மேட்டூர் அணை பூங்கா-வுக்கு சனிக்கிழமை 28,256 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.  இதன்மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ. 1,49,185 வசூலானது . கடந்த ஆண்டை விட 11,690 பார்வையாளர்கள்
குறைவாகவே வந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com