காமராஜர் விருதுக்கு மாணவர் தேர்வில் ஆசிரியர்கள் தீவிரம்
By DIN | Published On : 04th August 2019 04:56 AM | Last Updated : 04th August 2019 04:56 AM | அ+அ அ- |

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் தனித்திறன் கொண்ட பள்ளி மாணவர்கள் காமராஜர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் தனித்திறன் கொண்ட மாணவர்களுக்கு காமராஜர் விருது வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓமலூர், காடையாம்பட்டி மற்றும் தாரமங்கலம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் தனித்தன்மை கொண்ட மாணவர்களை தேர்வு செய்யும் பணிகளில் தலைமை ஆசிரியர்கள் மும்முரமாக உள்ளனர்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறும்போது, தமிழகத்தில்மாவட்டந்தோறும் கல்வி செயல்பாடு, தனித்திறன் உடைய மாணவர்களை கண்டறிந்து,காமராஜர் விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் 10-ம் வகுப்பில் 15 பேரும், 12-ம் வகுப்பில் 15 பேரும் தேர்வு செய்யப்பட்டு காமராஜர் விருது வழங்கப்படும். இதனுடன், முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 20 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
அதில், 2018 - 19-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் படித்த மாணவர்களில் காமராஜர் விருதுக்குத் தகுதியானவர்களின் விவரத்தை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந் நிலையில், பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கு 60 சதவீத மதிப்பெண்கள், கலை இலக்கிய திறன், விளையாட்டு திறன், அறிவியல் கண்காட்சி திறன், கல்வி இணை செயல்பாடுகளுக்கு தலா 10 மதிப்பெண் என 100 மதிப்பெண்களுக்கு மாணவர்களை மதிப்பீடு செய்து வருகின்றனர்.
மேலும், பள்ளிக்கு மூன்று மாணவ, மாணவியரைத் தேர்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அதற்கான பணிகளை செய்து வருவதாக கூறினர்.