பவானி, அமராவதி, வைகை, தாமிரவருணி நதிகளைத் தூய்மைப்படுத்த நடவடிக்கை: முதல்வர்  எடப்பாடி கே.பழனிசாமி

தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி, வைகை, தாமிரவருணி ஆகிய நான்கு நதிகளையும் சுத்தப்படுத்திட

தமிழகத்தில் உள்ள பவானி, அமராவதி, வைகை, தாமிரவருணி ஆகிய நான்கு நதிகளையும் சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் அரசுப் பொருள்காட்சியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்துப் பேசியது:
தமிழக முதல்வராக எம்ஜிஆர் பொறுப்பு வகித்த போது 1978 இல் முதல் முறையாக சேலம் அரசுப் பொருள்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. எம்ஜிஆரால் தொடங்கி வைக்கப்பட்ட சேலம் அரசுப் பொருள்காட்சியைத் தொடங்கி வைப்பதில் அவரது தொண்டனாக பெருமையடைகிறேன்.
1978 முதல் இதுவரை 204 அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. திருநெல்வேலி, காஞ்சிபுரத்தில் அரசுப் பொருள்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு,  நடந்து வருகிறது. அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.39.01 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 
எதிர்க்கட்சியினர் இந்த ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர்.  ஆனால்,  இந்த ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன என்பதை இந்த விழா மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். திருமணிமுத்தாறு கழிவுநீரால் மாசடைந்துள்ளது.  சேலம் மாவட்டத்தில் தொடங்கி நாமக்கல் வரை மாசடைந்த கழிவுநீருடன் காவிரியில் கலக்கிறது.
அந்த வகையில்,  மாசு கலந்த நீரை சுத்திகரிக்க மாநகராட்சி பகுதியில் அணைமேடு,  வெள்ளக்கடை,  மான்குட்டை, வண்டிபேட்டை உள்ளிட்ட நான்கு இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும்,  பாதாளச் சாக்கடைப் பணிக்காக ரூ.263 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் உபரி நீரை நீரேற்றுத் திட்டத்தின் கீழ் ரூ.565 கோடியில் 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதனால் நிலத்தடி நீர் உயர்ந்து விவசாயம் உயரும்.  பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். காவிரி-கோதாவரி நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கடும் முயற்சி எடுத்து வருகிறோம்.  இத் திட்டத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 125 டி.எம்.சி.  நீர் கிடைக்கும்.
கங்கை நதி நீரைச் சுத்தப்படுத்துவதைப் போல தமிழகத்தின் ஜீவநதியான காவிரி நதியை மாசு இல்லாத நதியாக சுத்தப்படுத்த பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.  அந்த கோரிக்கையை ஏற்கும் வகையில்,  காவிரி நதியைச் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.  தமிழகத்தின் கோரிக்கையை ஏற்ற பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள பவானி,  அமராவதி,  வைகை,  தாமிரவருணி ஆகிய நான்கு நதிகளிலும் மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தப்படுத்திட நடவடிக்கை எடுப்போம்.  நிலத்தடி நீரை உயர்த்திடும் வகையில் குடிமராமத்துத் திட்டத்தில் பொதுப் பணித் துறையின் 14,000 ஏரிகளை தூர்வாரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்,  2017 இல் ரூ.100 கோடியில் 1,519 ஏரிகளும்,  2017-18 ஆம் ஆண்டில் 1,511 ஏரிகள் ரூ.328 கோடியிலும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
தற்போது 2018-19 ஆம் ஆண்டில் ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளும் குடிமராமத்துத் திட்டத்தில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சிகளில் உள்ள ஏரிகளைத்த தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அதன்பேரில்,  திருவள்ளூர் மாவட்டம் மஞ்சாகரணை ஏரியைத் தூர்வாரும் பணியை வரும் ஆக.7 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளேன். 
அதேபோல,  பொதுப்பணித் துறையின் கீழ் வரும் பாலவாக்கம் ஏரி தூர்வாரும் பணியும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.  தற்போது அனைத்து தரப்பினரும் சட்டம் பயிலும் வகையில் மேலும் 3 சட்டக் கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. அந்தவகையில்,  சேலத்தில் புதிய சட்டக் கல்லூரி அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் சட்டக் கல்லூரி தொடங்கப்படும். சேலத்தில் நவீன பிரமாண்ட பேருந்து முனையம் (பஸ் போர்ட்) அமைப்பதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.  தமிழகத்திலேயே சேலத்தில் முதல் முதலாக விமான நிலையத்திற்கு இணையான வசதிகள் கொண்ட பேருந்து முனையம் அமைக்கப்பட இருக்கிறது என்றார்.
விழாவில், ரூ.13 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் துவக்கி வைத்தும், 11,571 பயனாளிகளுக்கு ரூ.17.96 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,  இயக்குநர் பொ.சங்கர், ஆட்சியர் சி.அ.ராமன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் என்.சந்திரசேகரன், நாமக்கல் எம்.பி.  ஏ.கே.பி.சின்ராஜ், எம்.எல்.ஏ-க்கள் செ.செம்மலை, ஜி.வெங்கடாஜலம், ஏ.பி.சக்திவேல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com