வறட்சியால் பாக்குமரங்கள் கருகின: வங்கிக் கடன்களை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

வாழப்பாடியில் கடந்த இரு ஆண்டுகளாகப் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது.

வாழப்பாடியில் கடந்த இரு ஆண்டுகளாகப் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், பாசனத்துக்கு வழியின்றி, ஆயிரக்கணக்கான பாக்கு மரங்கள் காய்ந்து
கருகிப்போயின.
வாழப்பாடி அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி, கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் வெள்ளாற்றின் கரையோர கிராமங்கள், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை பாசனம் பெறும் கிராமங்கள் மற்றும்  ஆண்டு முழுவதும் நீர்ப்பாசன வசதி கொண்ட பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக  நீண்டகால பலன் தரும் பாக்கு பயிரிடப்பட்டு வருகிறது.
ஒருமுறை பயிரிட்டால் மூன்றாவது ஆண்டில் இருந்து முப்பதாவது ஆண்டு வரை தொடர்ந்து மகசூல் கொடுக்கும் என்பதால், பாசன வசதி கொண்ட பெரும்பாலான விவசாயிகள், விளைநிலங்களில் பாக்கு மரங்களை விரும்பி பயிரிட்டு, தோப்புகளாக உருவாக்கி பராமரித்து பலனடைந்து வந்தனர். 30 ஆண்டுகள் வரை பலன் தந்து முதிர்ந்து போன பாக்கு மரங்களுக்கு மாற்றாக, அந்த மரங்களுக்கு அடியிலேயே, மீண்டும் பாக்கு மரக்கன்றுகளை நடவு செய்து, நிழலடியில் புதிய பாக்கு மரத்தோப்பு உருவாக்கும் "அடிக்கன்று நடவு முறையும், வாழப்பாடி பகுதி விவசாயிகளிடம் நடைமுறையில் இருந்து வருகிறது.
வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்கு மரக் காய்களை மரமேறும் கூலித் தொழிலாளர்களைக் கொண்டு அறுவடை செய்து, தோலுரித்து கொட்டைகளை வேக வைத்து பதப்படுத்தி "ஆப்பி' எனக் குறிப்பிடப்படும் "கொட்டைப் பாக்கு' உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுமட்டுமின்றி, பாக்குக் கொட்டைகளை இரண்டாக வெட்டி "சேலம் பாக்கு' என குறிப்பிடப்படும் "தாம்பூல கழிப்பாக்கு' உற்பத்தி செய்யப்படுகிறது.  
வாழப்பாடி பகுதியில் ஆண்டு தோறும் ரூ.500 கோடி அளவிற்கு பாக்கு வர்த்தம் நடைபெற்று வருகிறது. வாழப்பாடி பகுதியில் பாக்கு உற்பத்தி, அறுவடை, பதப்படுத்துதல் உள்ளிட்ட  பாக்கு சார்ந்த தொழிலால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில்  படிப்படியாக மழைப்பொழிவு குறைந்து வருவதால் கடந்த இரு ஆண்டாக கடும் வறட்சி நிலவுகிறது. வசிஷ்டநதி, வெள்ளாறு மற்றும் ஆணைமடுவு அணை, கரியகோவில் அணைகளும் நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கின்றன.
நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு  சரிந்து போனதால், அணை வாய்க்கால் பாசனம், ஆற்றுப்பானம் மட்டுமின்றி,  கிணற்று பாசனத்திற்கும் வழியில்லாததால், பாக்கு மரங்களுக்கு  விவசாயிகள் போதிய நீர் பாய்ச்ச முடியவில்லை.  இதனால், பாசனத்திற்கு வழியின்றி ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாக்கு மரங்கள்  காய்ந்து கருகி வருகின்றன. காய்ந்து கருகி நிற்கும் பாக்குமரங்களை வெட்டி, விறகுக்கு விற்பனை செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர். எனவே, பாக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், கூட்டுறவு கடன் சங்கங்கள், அரசு மற்றும் அரசு சாரா தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யவும், மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டுமென, வாழப்பாடி பகுதி விவசாயிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து இடையப்பட்டி, தும்பல் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது:
நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்கு கீழ் சரிந்து போனதால், பாக்குமரங்களை காப்பாற்ற லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆழ்துளை கிணறுகளை அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு கடன்தாரர்களாக மாறிவிட்டோம். 
எனவே, பாக்கு மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும்,  பயிர்க்கடன் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அனைத்து கடன்களையும் ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com