சேலம் உருக்காலை முன் தொழிலாளர்கள் காத்திருப்புப் போராட்டம்: தனியார் நிறுவனத்தினர் பார்வையிட எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதைத் தடுக்கும் வகையில், உருக்காலை தொழிலாளர்கள் ஆலை நுழைவு வாயிலின் முன் காத்திருக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை துவக்கி உள்ளனர்.

சேலம் உருக்காலையை தனியார் நிறுவனத்தினர் பார்வையிட வருவதைத் தடுக்கும் வகையில், உருக்காலை தொழிலாளர்கள் ஆலை நுழைவு வாயிலின் முன் காத்திருக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை துவக்கி உள்ளனர்.
 தமிழகத்தில் உள்ள மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாக, செயில் நிர்வாகம் சர்வதேச டெண்டருக்கு அழைப்பு விடுத்து இருந்தது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று அறிவித்திருந்த நிலையில், டெண்டர் கோர யாரும் வராததால், டெண்டர் கோருவதற்கான கால நீட்டிப்பை ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
 இந் நிலையில், சேலம் உருக்காலையை பார்வையிட தனியார் துறையினர் ஆலைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, ஆலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர், தனியார் நிறுவனத்தினரை உள்ளே நுழைய அனுமதிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆலையின் நுழைவு வாயிலின் முன் காத்திருப்புப் போராட்டத்தை திங்கள்கிழமை துவக்கினர். தொமுச, சிஐடியு, ஐஎன்டியுசி உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை முதல் உருக்காலையின் பிரதான நுழைவுவாயிலின் முன் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 மேலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில், இந்தப் போராட்டத்தை நடத்திட திட்டமிட்டுள்ளனர். மேலும் உருக்காலைக்கு வரும் அடையாளம் தெரியாத வாகனங்களை சோதனை செய்த பின்னரே ஆலைக்குள் அனுமதித்து வருகின்றனர். தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தால் ஆலை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.
 இதுகுறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: சேலம் உருக்காலை தொழிலாளர்களின் பல்வேறு கட்ட போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
 இதன் ஒரு பகுதியாக வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்குள் தனியார் நிறுவனத்தினர் ஆலையைப் பார்வையிட வருவதாக தகவல் வந்துள்ளது. அவர்களை ஆலைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் வகையில், போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இதுதவிர, உருக்காலையை தனியார்மயமாக்குவதை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும்.
 மேலும் தனியார் துறையினர் உள்ளே நுழையாமல் இருக்க எந்தவிதப் போராட்டத்துக்கும் தயாராக உள்ளோம் என்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com