சேலம் நான்கு சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம்
By DIN | Published On : 09th August 2019 08:47 AM | Last Updated : 09th August 2019 08:47 AM | அ+அ அ- |

சேலம் நான்கு சாலை பகுதியில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் குரங்குச் சாவடியில் இருந்து நான்கு சாலை வரையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஈரடுக்கு பாலமாக அமையும் இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி நான்கு சாலை பகுதியில் கீழே இறங்க உள்ளது. எனவே, அப் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு செல்லும் இலகுரக வாகனங்கள் மற்றும் நகர பேருந்துகள் அனைத்தும் டிவிஎஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இடதுபுறமாக செல்லும் சாலையான மார்க்கபந்து சாலை, பெரமனூர் சாலை, ராமகிருஷ்ணா சாலை வழியாகச் செல்ல வேண்டும்.
மேலும் ஆத்தூர் வழித்தடத்தில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அனைத்தும் ராமலிங்கா சந்திப்பு, 3 சாலை சந்திப்பு, சத்திரம், சீத்தாராம் செட்டி சாலை, சுந்தர் லாட்ஜ் வழியாகச் செல்ல வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் நான்கு சாலையில் இருந்து வலதுபுற சாலையான டிவிஎஸ் சந்திப்புக்கு வந்து மீண்டும் இடதுபுற பாதையில் செல்ல வேண்டும் என மாநகர போக்குவரத்து போலீஸார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.