நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
By DIN | Published On : 09th August 2019 08:47 AM | Last Updated : 09th August 2019 08:47 AM | அ+அ அ- |

காடையாம்பட்டி தாலுகாவில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, விவசாயிகளுக்கு மண் அள்ளும் உரிமை என 63 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
காடையாம்பட்டி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர்மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஓமலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.வெற்றிவேல் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கணவாய்ப்புதூர் ஊராட்சியில் உள்ள மலை கிராமத்தைச் சேர்ந்த 14 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, 36 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் உதவித்தொகை , 13 விவசாயிகளுக்கு குடி மராமத்துப் பணி மூலம் ஏரிகளில் வண்டல் மண் அள்ளுவதற்கான உத்தரவுகளை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் சித்தேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.