காவிரி கரையில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் : மீன்வளத் துறை எச்சரிக்கை

 மேட்டூர் காவிரி கரையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மேட்டூர் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 மேட்டூர் காவிரி கரையில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மேட்டூர் மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேட்டூர் அணையின் நீர்த் தேக்கப் பரப்பு 60 சதுர மைல் கொண்டது. இதில் 2 ஆயிரம் மீனவர்கள் உரிமம் பெற்று மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, ஏமனூர், கோட்டையூர், பண்ணவாடி, சேத்துக்குழி, மாசிலாப்பாளையும் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையில் முகாம் அமைத்து மீன் பிடித்து வருகின்றனர். 
தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு அதிக அளவில் வெள்ளம் வரும் என்பதால், மேட்டூர் மீன்வளத் துறை உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மேட்டூர் அணை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடக மாநில அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு அதிக அளவில் தண்ணீர் வரக்கூடும். எனவே மீனவர்கள் காவிரியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.  வலைகள் மற்றும் பரிசல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். முகாம்களை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களும் காவிரி கரைக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
இதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் முகாம்களில் முடங்கிக் கிடக்கின்றனர். சிலர் குடும்பத்தோடு தங்களின் சொந்த கிராமங்களுக்கு சென்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com